ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை: ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜர்...!


ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை: ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜர்...!
x
தினத்தந்தி 21 March 2022 11:23 AM IST (Updated: 21 March 2022 11:23 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகியுள்ளார்.

சென்னை, 

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் 2¾ ஆண்டுகளுக்கு பின்பு தற்போது மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளது.

சசிகலாவின் உறவினர்கள், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் என 154 பேரிடம் ஆணையம் ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ள நிலையில் சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் பேரில் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட அப்பல்லோ டாக்டர்களிடம் மறு விசாரணை நடத்தியது. இவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை மேற்கொண்டது.

அதேவேளை, ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது பெரும்பாலான நாட்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்தவர்களில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் ஒருவர்.

இதன்காரணமாக இந்த விசாரணையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்த ஆணையம் ஏற்கனவே முடிவு செய்தது. விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஓ.பன்னீர் செல்வத்திற்கு பல முறை ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. ஆனால், பல முறை சம்மன் அனுப்பியும் ஓபிஎஸ் ஆஜராகாமல் இருந்தார்.

இதற்கிடையில், வழக்கு விசாரணை தொடர்பாக திங்கட்கிழமை (இன்று) ஆணையத்தின் முன் ஆஜராகும்படி ஆறுமுகசாமி ஆணையம் 9-வது முறையாக சம்மன் அனுப்பியது.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் ஆறுமுகசாமி ஆணையம் முன் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆஜராகியுள்ளார். அவரிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

அதேபோல், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியும் இன்று ஆறுமுகசாமி ஆணையம் முன் ஆஜராகியுள்ளார். அவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story