விடுமுறை நாளில் டாக்டரை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஐகோர்ட்டு கேள்வி


விடுமுறை நாளில் டாக்டரை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 22 March 2022 2:54 AM IST (Updated: 22 March 2022 2:54 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர் சுப்பையாவை விடுமுறை நாளில் போலீசார் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பணியாற்றுபவர் டாக்டர் சுப்பையா. முதல்-அமைச்சர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்திய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அகில இந்திய வித்யார்த்தி பரிசத் (ஏ.பி.வி.பி.) அமைப்பினரை சிறையில் சென்று பார்த்தற்காக இவரை அரசு பணி இடைநீக்கம் செய்தது.இந்தநிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 25-ந் தேதி பாலாஜி விஜயராகவன் என்பவரது வீட்டின் முன்பு சிறுநீர் கழித்ததாகவும், வீட்டுக்குள் பயன்படுத்திய முக கவசத்தை போட்டதாகவும் ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதிகார நபரின் தூண்டுதல்

இந்த புகாரின் அடிப்படை பொதுசொத்துகளை சேதப்படுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கடந்த 19-ந் தேதி டாக்டர் சுப்பையாவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் சுப்பையா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி, ‘புகார்தாரருடன் மனுதாரர் ஏற்கனவே சமரசம் செய்து கொண்டார். மனுதாரர் மாணவர் அமைப்பின் நிர்வாகி என்பதால், 2 ஆண்டுகளுக்கு பின்னர், அந்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில் கூடுதல் சட்டப்பிரிவுகளை சேர்த்து, மனுதாரரை போலீசார் கைது செய்துள்ளனர். அதிகாரத்தில் உள்ள நபரின் தூண்டுதலின்பேரில் இது நடந்துள்ளது’ என்று வாதிட்டார்.

விடுமுறை நாளில் கைது

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஒருவரை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யும்போது, அவரால் திங்கட்கிழமை வரை ஜாமீன் கேட்டு கோர்ட்டை அணுக முடியாது. எனவே, இதுபோன்ற கைது சம்பவம் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று இந்த ஐகோர்ட்டு ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளது.இந்த ஐகோர்ட்டு மட்டுமல்ல, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநில ஐகோர்ட்டுகளும் இதே கருத்தை வலியுறுத்தி, விடுமுறை நாட்களில் கைது நடவடிக்கையை மேற்கொள்ளும் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐகோர்ட்டு ஆவல்

இந்த வழக்கில் உள்நோக்கத்துடன் மனுதாரரை பொது விடுமுறை நாளில் கைது செய்துள்ள விதம் அடிப்படை உரிமையை மீறிய செயலாகும், எனவே, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குகிறேன்.

இந்த ஜாமீன் மனுவுக்கு போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கூடுதல் குற்றவியல் வக்கீல் கூறினார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தில், மனுதாரரை பொது விடுமுறை நாளில் போலீசார் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்பதை தெரிந்து கொள்ள இந்த ஐகோர்ட்டும் ஆவலுடன் காத்திருக்கிறது. விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Next Story