காவல்நிலையங்களில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஒன்றரை ஆண்டுகள் வரை சேமிக்க வேண்டும் - ஐகோர்ட் மதுரைக்கிளை
காவல்நிலையங்களில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை சேமிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
மதுரை,
போலீசார் சட்டவிரோதமாக நபர் ஒருவரை காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி (CCTV) பதிவுகளை ஓராண்டு அல்லது 18 மாதங்கள் சேமித்து வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் வடமதுரையை சேர்ந்த சரவண பாலகுருசாமி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், வடமதுரையில் உள்ள நிலம் தொடர்பாக தனக்கும் மற்றொரு குடும்பத்தினருக்கும் தகராறு இருந்து வந்ததாகவும் இது தொடர்பாக வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது வழக்கு பதிவு செய்ய சார்பு ஆய்வாளர், ஆய்வாளர் ஆகியோர் ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு தான் மறுப்பு தெரிவித்த நிலையில், இரு தரப்பு புகாரின் பேரில் வடமதுரை போலீசார், தன்னை சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் வைத்து துன்புறுத்தினர். எனவே, தன்னை துன்புறுத்திய திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலையத்தில் அப்போது பணியில்இருந்த காவல் ஆய்வாளர், சிறப்பு ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “காவல்நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் 30 நாட்களுக்கு மட்டும் பராமரிக்கப்படும். அதன்பிறகு தானாகவே அழிக்கப்படும் என்ற நிலை தற்போது உள்ளது.
காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் குறைந்தபட்சம் 18 மாதங்களுக்கு சேமிக்கப்பட வேண்டும். சிசிடிவி கேமராக்கள், இரவு நேரத்திலும் பதிவு செய்யக்கூடிய வகையில் நைட் விஷனுடன் கூடியதாக இருக்க வேண்டும், மேலும் அவை ஆடியோ மற்றும் வீடியோ காட்சிகளைக் பதிவு செய்யும் வகையில் இருக்க வேண்டும். சேமிப்பகம் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர்கள் அல்லது நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர்களில் சேமித்து வைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறுகிறது” என்று தெரிவித்தார்.
மேலும் காவல்நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் குறைந்தபட்சம் ஒரு வருடம் அல்லது 18 மாதங்கள் வரை சேமிக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் சில வழக்குகளில் கூறியுள்ளதாகவும், எனவே இந்த வழக்கில், உள்துறை (காவல்துறை) துறை முதன்மை செயலாளர், காவல்துறை தலைவர் /இயக்குநர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்ப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
இதை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில், பதிவான காட்சிகள் குறைந்தபட்சம் ஒரு வருடம் அல்லது பதினெட்டு மாதங்கள் வரை சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்படவேண்டும். மூன்று மாத காலத்திற்குள் , இந்த உத்தரவை நிறைவேற்ற வேண்டும். தவறினால் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.
Related Tags :
Next Story