மதிமுகவின் தலைமை கழக செயலாளராக துரை வைகோ ஒருமனதாக தேர்வு
மதிமுகவின் தலைமை கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
மதிமுக தலைமை கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் 28-வது பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணாநகரில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் வைகோ, துரை வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இருப்பினும் துரை வைகோவை தலைமை கழக செயலாளராக அறிவித்ததற்கு மதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்து இருந்த சிவகங்கை, விருதுநகர், திருவள்ளூர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் கூட்டத்தை புறக்கணித்து பங்கேற்கவில்லை.
இதேபோல் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் நாகை மோகன், வழக்கறிஞர் அழகு சுந்தரம், வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த தேவதாஸ் உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இதனால் அவைத் தலைவர் இல்லாமல் கூட்டம் வைகோ தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து ம.தி.மு.க. தலைமை கழக செயலாளராக துரை வைகோ தேர்வு செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவருக்கு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். பிறகு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சிக்கு எதிராக பேசுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story