பாலியல் புகாரில் அலட்சியம் காட்டிய ஏட்டு ஆயுதப்படைக்கும் மாற்றம் - வேலூர் எஸ்.பி. உத்தரவு
பாலியல் புகாரில் அலட்சியமாக செயல்பட்டதற்காக வேலூர் வடக்கு காவல் நிலைய தனிப்பிரிவு ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர்,
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பீகாரை சேர்ந்த பெண் டாக்டர் பணிபுரிந்து வந்தார். இவர் அதே மருத்துவமனையில் பணிபுரியும் ஆண் நண்பருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்பாடியில் உள்ள ஒரு தியேட்டரில் சினிமா பார்க்க சென்றார். சினிமா முடிந்ததும் நள்ளிரவில் இருவரும் தியேட்டர் முன்பு ஆட்டோவுக்காக நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ஆட்டோ ஒன்று வந்தது. ஆட்டோவில் டிரைவர் மற்றும் 4 ஆண்கள் இருந்தனர். அப்போது டிரைவர் இது ஷேர் ஆட்டோ தான். வேலூர் செல்லும் வழியில் ஒவ்வொருவராக இறங்கி விடுவார்கள் என்று கூறி அவர்களை ஆட்டோவில் ஏற்றினார்.
சிறிது தூரம் சென்ற நிலையில் திடீரென ஆட்டோவில் இருந்த 4 பேரும் ஆண் நண்பரை சரமாரியாக தாக்கி விரட்டினர். கத்திமுனையில் டாக்டரை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் அவரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன், 2 பவுன் செயின், மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்து அதில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுத்தனர்.
இந்த சம்பவம் வேலூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் ஆன்லைன் மூலம் வேலூர் மாவட்ட காவல்துறைக்கு புகார் அளித்தார். அதன்பேரில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பார்த்திபன் (வயது 20), பாலா என்ற பரத் (19), மணி என்ற மணிகண்டன் (21), சந்தோஷ் (21) மற்றும் 17 வயது சிறுவன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து சந்தோஷ் தவிர மற்ற 4 பேரையும் வேலூர் வடக்கு போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக காணப்பட்ட சந்தோசை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பெண் டாக்டரின் செல்போன், 2 பவுன் செயின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 17 வயது சிறுவன் உள்பட 5 பேரையும் போலீசார் வேலூர் மகளிர் விரைவு கோர்ட்டு நீதிபதி கலைபொன்னி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர் பலத்த போலீஸ் காவலுடன் பார்த்திபன், பரத், மணிகண்டன் ஆகிய 3 பேரும் வேனில் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவன் சென்னை கெல்லீஸ் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டான். மேலும் கைது செய்யப்பட்ட சந்தோஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக (தலைமைக் காவலர்) பணிபுரியும் ஜெயகரன் என்பவர், பெண் டாக்டர் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்கவில்லை என்றும், பணியில் அலட்சியமாக இருந்ததற்காவும் குற்றச் சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் தனிப்பிரிவு ஏட்டு ஜெயகரனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து வேலூர் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story