‘தமிழ்நாடு முதல் மாநிலம் என்று சொல்லும் அளவுக்கு எனது வெளிநாட்டு பயணம் அமையும்’ முதல்-அமைச்சர் பேச்சு


‘தமிழ்நாடு முதல் மாநிலம் என்று சொல்லும் அளவுக்கு எனது வெளிநாட்டு பயணம் அமையும்’ முதல்-அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 25 March 2022 5:22 AM IST (Updated: 25 March 2022 5:22 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலம் என்று சொல்லும் அளவுக்கு எனது வெளிநாட்டு பயணம் அமையும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய், அபுதாபிக்கு செல்கிறார். இதுகுறித்து தமிழக சட்டசபையில் விஜயதரணி (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), ஈஸ்வரன் (கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி), சதன் திருமலைகுமார் (ம.தி.மு.க.), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, தமிழகத்திற்கு அதிக முதலீடுகளையும், வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று வாழ்த்தினர்.

அதன் பின்னர் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:-

நிதித் துறை அமைச்சரும், வேளாண் துறை அமைச்சரும் பதிலுரையாற்றி, இந்த அவையில் இருக்கக்கூடிய அனைவருடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்றிருக்கிறார்கள். இந்த அரசு மிகச் சிறப்பாக பல திட்டங்களை, பல பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்று பல்வேறு மாநிலங்களில், வெளிநாடுகளில் இருப்பவர்கள் கூட பாராட்டக்கூடிய அளவிற்கு நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படிப் பெருமைப்படுகிற அளவிற்கு வந்து கொண்டிருக்கக்கூடிய செய்திகளையெல்லாம் நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

2 அமைச்சர்களும்....

இந்த அரசைப் பொறுத்தவரையில் எவ்வளவோ துறைகள் இருந்தாலும், முக்கியமான துறை நிதித் துறைதான். அந்த நிதித் துறையின் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மிகச் சிறப்பான வகையில், தன்னிடத்தில் இருக்கக்கூடிய அனுபவங்களைக் கொண்டும், வெளிநாடுகளில் தாம் பெற்றிருக்கக்கூடிய பல நல்ல அம்சங்களையெல்லாம் மனதிலே தேக்கிவைத்துக் கொண்டு, அந்தப் பணியை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். உள்ளபடியே பாராட்டுக்குரியவராக அவர் விளங்கிக் கொண்டிருக்கிறார்.

வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேங்கையின் மைந்தன் என்று பெயர் பெற்றவர். இப்போது அவர் வேங்கையின் மைந்தன் மட்டுமல்ல, விவசாயிகளுடைய மைந்தனாக மாறி, அவரும் தன்னுடைய கடமையைச் சிறப்போடு நிறைவேற்றியிருக்கிறார். இது ஒவ்வொரு ஆண்டும் தொடர வேண்டும். அவர்கள் தொடர்வார்கள் என்ற நம்பிக்கை நிச்சயமாக எனக்கு இருக்கிறது. அதை அவர்கள் நிறைவேற்றித் தருவார்கள் என்ற உணர்வோடு, அவர்களை வாழ்த்தி, அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

சபாநாயகர், அவை முன்னவர் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சார்ந்திருக்கக்கூடிய தலைவர்கள், உறுப்பினர்கள், நான் மேற்கொள்ளவிருக்கக்கூடிய துபாய், அபுதாபி பயணத்திற்கு தங்களது வாழ்த்துக்களையெல்லாம் தெரிவித்திருக்கிறார்கள். அதற்கு நான் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெளிநாடு பயணம்

ஒன்றை மட்டும் நான் உறுதியோடு சொல்கிறேன். பல நிகழ்ச்சிகளில் நான் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். இந்தியாவிலேயே நம்பர்-1 முதல்-அமைச்சர் என்ற அந்த பாராட்டைப் பெறுவதிலே எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அதைவிட எனக்கு பெருமகிழ்ச்சி எதுவென்றால், இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் மாநிலம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நம்முடைய தமிழகம் வர வேண்டும். அந்த அடிப்படையில்தான் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

எனவே, அப்படிப்பட்ட அந்த வெற்றிக்கு துபாய், அபுதாபி பயணம் நிச்சயம் துணை நிற்கும். அதற்கு நீங்கள் வாழ்த்தியிருக்கிறீர்கள். வாழ்த்திய நெஞ்சங்களுக்கு மீண்டும் என்னுடைய சார்பிலே நன்றி தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story