பயண வழி உணவகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வேண்டும் போக்குவரத்துத்துறை சார்பில் நிபந்தனைகள் அறிவிப்பு


பயண வழி உணவகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வேண்டும் போக்குவரத்துத்துறை சார்பில் நிபந்தனைகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 26 March 2022 12:22 AM IST (Updated: 26 March 2022 12:22 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் உள்ள பயண வழி உணவகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். உணவக வளாகத்தில் கழிப்பிட வசதி இருக்க வேண்டும். வாங்கும் உணவுப்பொருட்களுக்கு கணினி வழி ரசீது கட்டாயம் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை போக்குவரத்துத்துறை விதித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக பஸ்கள் நிறுத்தப்படும் பயண வழி உணவகங்களுக்கு போக்கு வரத்துத்துறை சார்பில் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

* உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம், சுவை உள்ளதாக இருக்க வேண்டும்.

* உணவகம் மற்றும் அதன் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கும்படி பராமரிக்க வேண்டும்.

* பயணிகள் அருந்துவதற்கு சுத்திகரிக்கப் பட்ட குடிதண்ணீர் வழங்கப்பட வேண்டும்.

* கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும். கழிவறை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். பயோ-கழிவறை வசதியும் இருக்க வேண்டும்.

* உணவகத்தின் அமைப்பு பஸ்கள் நின்று செல்வதற்கு போதுமான இடவசதியுடன் இருக்க வேண்டும்.

* பஸ்கள் நிறுத்தும் இடத்தில் கான்கிரீட் ஷீட் அல்லது பேவர் பிளாக் போட்டிருக்க வேண்டும்.

* உணவகம் கட்டாயம் சாலையின் இடதுபுறமாக மட்டுமே அமைந்திருக்க வேண்டும்.

* உணவகத்துக்கு மின் இணைப்பு மற்றும் ஜெனரேட்டர் வசதி இருக்க வேண்டும்.

கண்காணிப்பு கேமராக்கள்

* உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

* உணவுப்பொருட்களின் விலைப்பட்டியல் பலகை பயணிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது.

* உணவகத்தில் வாங்கும் பொருட்களுக்கு கணினி மூலம் ரசீது தரப்பட வேண்டும்.

* உணவக முன்புற வாசலில், பூட்டப்பட்டுள்ள புகார் பெட்டி வைத்திருக்க வேண்டும்.

இதுபோன்ற நிபந்தனைகளை போக்குவரத்துத்துறை விதித்திருக்கிறது.

அசைவ உணவுக்கும் அனுமதி

போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் சாலையோர உணவகங்களில் பயணிகள் உணவு அருந்துவதற்கேற்ப பஸ் நிறுத்துவது சம்பந்தமாக, அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் மூலம் டெண்டர் கோரப்பட்டது,

அப்போது டெண்டர் நிபந்தனையில் ஒன்றாக “சைவஉணவு” மட்டுமே சாலையோர உணவகங்களில் சமைக்கப்பட வேண்டும், மற்றும் பயணிகளுக்கு பரிமாறப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து பஸ் பயணிகளிடமிருந்து மாறுபட்ட கருத்தும், “அசைவ உணவும்” பரிமாறப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பெறப்பட்டதன் அடிப்படையில் “சைவ உணவு” மட்டுமே சமைக்கப்பட வேண்டும், மற்றும் பரிமாறப்பட வேண்டும் என்ற டெண்டர் நிபந்தனை விலக்கி கொள்ளப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story