தமிழகத்தில் ரூ.2,600 கோடி முதலீடு செய்யும் அமீரக தொழில் நிறுவனங்கள்
துபாயில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பு கூட்டத்தில், அமீரக தொழில் நிறுவனங்கள் சார்பில் தமிழகத்தில் ரூ.2,600 கோடி முதலீடு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி முதல் உலக அளவிலான எக்ஸ்போ 2020 கண்காட்சி நடைபெற்று வருகிறது.
துபாய் பயணம்
இந்தியா, அமீரகம் உள்பட 192 நாடுகள் இந்த கண்காட்சியில் தங்களது அரங்குகளை அமைத்துள்ளன. இதில் இந்திய அரங்கில் ஒவ்வொரு மாநிலமும் தங்களது அரங்குகளை அமைத்துள்ளன.
அதன்படி, துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியின் இந்திய அரங்கில் 25-ந்தேதி முதல் 31-ந் தேதி வரை ‘தமிழ்நாடு வாரம்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரங்கு மூலம் சர்வதேச அளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டு, துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தது.
தமிழக அரங்கு திறப்பு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24-ந் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு துபாய் வந்தடைந்தார். நேற்று முன்தினம் காலை துபாய் சர்வதேச நிதி மையத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அமீரக மந்திரிகளை சந்தித்து பேசினார். பின்னர் மாலை துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாட்டு அரங்கை திறந்து வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை அவரது பிர்தோஸ் ஸ்டூடியோவில் சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து இரவு உலகின் மிக உயரமான கட்டிடமான துபாய் புர்ஜ் கலீபாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
முதலீட்டாளர்கள் சந்திப்பு கூட்டம்
தொடர்ந்து நேற்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் ஜெபல் அலி சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு சென்றார். அங்குள்ள செயல்பாடுகள் குறித்து அவர் நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து அவர் துபாய் பிசினஸ் பே பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இதில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் திட்டங்கள், தமிழகத்தில் தொழில் தொடங்க உள்ள வசதிகள் குறித்த வீடியோ காட்சிகள் திரையில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து துபாயில் உள்ள பன்னாட்டு வர்த்தகர்களுக்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
நோபிள் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன்...
முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற ஒப்பந்த நிகழ்ச்சியில், இரும்பு தளவாடங்களை உற்பத்தி செய்யும் நோபிள் ஸ்டீல்ஸ் குழும நிறுவனத்துடன் மட்டும் 1,000 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சாகுல் ஹமீது மற்றும் தமிழ்நாடு அரசு நிறுவனமான ‘கைடன்ஸ்’-இன் மேலாண்மை இயக்குனர் பூஜா குல்கர்னி ஆகியோர் கையெழுத்திட்டனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் 1,200 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உணவுப்பூங்கா அமைக்க...
அதனை தொடர்ந்து துபாயை சேர்ந்த ‘ஒயிட் ஹவுஸ்’ நிறுவனத்தின் சார்பில், தமிழகத்தில் தையல் ஆலைகள் நிறுவுவதற்கு ரூ.500 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அந்த நிறுவனத்தின் சார்பில், மேலாண்மை இயக்குனர் அப்துல் பாரி கலந்துகொண்டு ஒப்பந்தம் செய்தார். இதன் மூலம் தமிழகத்தில், 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரப்பட உள்ளது.
இறுதியாக டிரான்ஸ்வேர்ல்டு குழுமம் தமிழ்நாடு அரசுடன் ரூ.100 கோடி மதிப்பிலான முதலீட்டில் உணவுப்பூங்கா அமைப்பதற்கான ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
ரூ.2,600 கோடி முதலீடு
பின்னர் நேற்று மாலை நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆஸ்டர் டி.எம். ஹெல்த்கேர் அமைப்பு ரூ.500 கோடி முதலீடு மற்றும் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், 500 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியை தமிழ்நாட்டில் நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் அமைப்பின் தலைவர்-மேலாண்மை இயக்குனர் டாக்டர் ஆசாத் மூப்பன் பங்கேற்றார்.
அதனைத்தொடர்ந்து ஷெராப் குழும நிறுவனம், தமிழ்நாட்டில் ரூ.500 கோடி முதலீடு மற்றும் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், இருப்புப்பாதை இணைப்பு வசதியுடன், ஒரு சரக்கு போக்குவரத்து பூங்கா அமைத்திடுவதற்காக, தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இக்குழுமத்தின் துணைத்தலைவர் எச்.ஈ. மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஷெராப்புதின் ஷெராப் மற்றும் அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஷியாம் கபுர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் சேர்த்து ரூ.2,600 கோடி முதலீடு மற்றும் 9 ஆயிரத்து 700 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு நாடுகளின் முன்னணி நிறுவனங்களுடன் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஐ.பி.பி.சி. துபாய் நிறுவனத்தின் தலைவர் சுரேஷ்குமார், சர்வதேச லூலூ குழுமத்தின் தலைவரும், அபுதாபி வர்த்தக பேரவையின் துணைத்தலைவருமான எம்.ஏ.யூசுப் அலி, ஐக்கிய அரபு அமீரக சர்வதேச முதலீட்டாளர்கள் அமைப்பின் செயலாளர் (பொது) எச்.ஈ.ஜமால் சாயிப் அல் ஜர்வான், தொழில்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ச.கிருஷ்ணன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண் ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பூஜா குல்கர்ணி, துணைத் தூதர் டாக்டர் அமன்புரி, தமிழக அரசின் உயர் அதிகாரிகள், ஐக்கிய அரபு அமீரக நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story