கடல் கடந்து சென்றேன்; கை நிறைய ஒப்பந்தங்களையும், முதலீடுகளையும் பெற்றேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடல் கடந்து சென்றேன்; கை நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அதற்கான முதலீடுகளையும் பெற்றேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் அரசு முறை பயணமாக கடந்த 24-ந்தேதி மாலை விமானம் மூலம் துபாய் சென்றார். அவருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் உயர் அதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.
துபாயில் முதல் நாள் நிகழ்ச்சியாக துபாயில் நடைபெற்ற சர்வதேச எக்ஸ்போ கண்காட்சியில் பங்கேற்று தமிழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து துபாயில் உள்ள ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்களை சந்தித்தார்.
இந்த நிலையில், துபாய் பயணம் குறித்து திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
துபாய் மற்றும் அபுதாபி பயணம் பல்வேறு அனுபவங்களைத் தந்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கான நம்பிக்கையை அளித்துவரும் இப்பயணம், அறிவியல் பார்வையிலும் புதுமையை அள்ளித் தந்துள்ளது.
கடல் கடந்து சென்றேன்; கை நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அதற்கான முதலீடுகளையும் பெற்றேன். தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளிலிருந்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் அரசு முனைப்புடன் உள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமீரகப் பயணம் முழுமையான வெற்றியைத் தந்துள்ளது.
துபாய் பயணம் குறித்து ஒரு சிலர் அரசியலுக்காகப் பேசினாலும், பொதுமக்களும் உண்மை நிலை அறிந்த மாற்றுக் கட்சியினரும் மனதார வரவேற்றுள்ளனர்.
அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் மிக மோசமான பொருளாதாரச் சீரழிவுக்கும் நெருக்கடிக்கும் தமிழ்நாடு உள்ளானது. கடந்த 10 மாதகால விடியல் வெளிச்சம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் பரவிட வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் துபாய்க்கு பயணம் மேற்கொண்டுள்ளேன்.
அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முதன்மை மாநிலம் என்ற பெருமை தமிழ்நாட்டிற்கு கிடைத்திட வேண்டும் என்பதே நமது அரசின் முதன்மை நோக்கம். என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story