தமிழகம் முழுவதும் குறைந்த அளவிலே பஸ்கள் இயக்கம்; பயணிகள் அவதி- சென்னை மின்சார-மெட்ரோ ரெயில்களில் அலைமோதிய கூட்டம்


தமிழகம் முழுவதும்  குறைந்த அளவிலே பஸ்கள் இயக்கம்; பயணிகள் அவதி- சென்னை  மின்சார-மெட்ரோ ரெயில்களில் அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 28 March 2022 5:32 PM IST (Updated: 28 March 2022 5:32 PM IST)
t-max-icont-min-icon

பஸ்கள் குறைந்த அளவே ஓடியதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவ- மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.

சென்னை,

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் 2 நாள் வேலைநிறுத்தம் இன்று (திங்கட்கிழமை) காலை தொடங்கியது. மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் திட்டங்களுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தை நடத்துகின்றன. “ஊழியர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது” என மத்திய-மாநில அரசுகள் எச்சரித்தபோதும் கூட அவற்றை மீறி இன்று வேலைநிறுத்தம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில்  போக்குவரத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வேலைநிறுத்தம் தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்து கழகங்களில் 1.35 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலான டிரைவர், கண்டக்டர்கள் இன்று பணிக்கு வரவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 70 சதவீத பஸ்களை இயக்க முடியவில்லை.



பஸ்களை குறைந்த அளவிலாவது இயக்குவதற்கு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் அது பலனளிக்கவில்லை.  இதனால் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. டெப்போக்களில் இருந்து பஸ்களை எடுக்க டிரைவர், கண்டக்டர்கள் வராததால் வழக்கமான சேவை நடைபெறவில்லை.

சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி நகரங்களை மையமாக கொண்டு செயல்படுகின்ற அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த 19 ஆயிரம் பஸ்கள் தினமும் இயக்கப்படும். ஆனால் இன்று அவற்றில் 70 சதவீத பஸ்கள் ஓடவில்லை.

அதிகாரிகள் வற்புறுத்தலின் பேரில் குறைந்த அளவு டிரைவர், கண்டக்டர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் கடும் தவிப்புக்குள்ளாகினார்கள். வெளியூர் செல்லக்கூடிய பஸ்கள் மட்டுமின்றி நகர பேருந்துகளும் பெருமளவில் ஓடவில்லை. தனியார் பஸ்கள் முழுமையாக ஓடியதால் அதில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சென்னையில் 3,175 மாநகர பஸ்கள் தினமும் இயக்கப்படும். இவற்றில் 80 சதவீத பஸ்கள் கூட ஓடவில்லை. 31 டெப்போக்களிலும் பஸ்களை இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 300 பஸ்களுக்கு குறைவாகவே ஓடியதால் பொதுமக்கள் பஸ் நிறுத்தங்களிலும், பஸ் நிலையங்களிலும் நீண்ட நேரம் காத்து நின்றனர்.



பஸ்கள் ஓடாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவ- மாணவிகள் பாதிக்கப்பட்டனர். அரசு பஸ்களை நம்பி பயணம் செய்யக்கூடிய மாணவர்கள் மிகுந்த சிரமத்துடன் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று சென்றனர்.

இதேபோல் வங்கி சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு, கிராம வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கி ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல் மற்றும் காசோலை பரிவர்த்தனை பணிகள் முழுமையாக முடங்கின.

மின்சார ரெயிலில் அலைமோதிய கூட்டம்

பொதுவேலை நிறுத்தம் நடந்தாலும் ரெயில் போக்குவரத்து வழக்கம்போல் நடந்தது. பொதுவேலை நிறுத்தத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டாலும் அலுவலகங்கள், நிறுவனங்கள் செயல்பட்டதால் கட்டாயம் பணிகளுக்கு செல்ல வேண்டியவர்கள் திண்டாடினார்கள்.



மின்சார ரெயில்களிலும், மெட்ரோ ரெயில்களிலும் வழக்கமாக நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே கூட்டம் அலைமோதும்.

ஆனால் இன்று பயணிகள் கூட்டம் காலையில் இருந்தே அலைமோதியது. தாம்பரம்-கடற்கரை, சென்ட்ரல்-அரக்கோணம் வழத்தடத்தில் பல ரெயில் நிலையங்களில் டிக்கெட் வாங்குவதற்காக பலர் திரண்டனர். நீண்ட நேரம் காத்திருந்துதான் அவர்களால் டிக்கெட் வாங்க முடிந்தது. சென்ட்ரல்-பரங்கிமலை, வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களில் இன்று வழக்கத்தைவிட அதிகமான கூட்டம் காணப்பட்டது.

மின்சார ரெயில்களைவிட மெட்ரோ ரெயில்களில் கட்டணம் அதிகமாக இருப்பதால் சாமானிய மக்கள் பலர் மெட்ரோ ரெயில் பயணத்தை விரும்பவில்லை. ஆனால் இன்று மெட்ரோ ரெயில்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.


Next Story