‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற கூடைப்பந்து வீராங்கனை அனிதாவுக்கு கார் வாங்க ரூ.10 லட்சம் நிதி


‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற கூடைப்பந்து வீராங்கனை அனிதாவுக்கு கார் வாங்க ரூ.10 லட்சம் நிதி
x
தினத்தந்தி 29 March 2022 7:01 PM GMT (Updated: 29 March 2022 7:01 PM GMT)

‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற கூடைப்பந்து வீராங்கனை அனிதாவுக்கு கார் வாங்குவதற்காக ரூ.10 லட்சத்துக்கான காசோலை, தமிழக பா.ஜ.க. சார்பில் வழங்கப்பட்டது.

சென்னை,

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட அனிதா பால்துரை, இந்திய கூடைப்பந்து பெண்கள் அணியின் கேப்டன் ஆவார். உலகின் மிகச்சிறந்த 10 வீராங்கனைகளில் ஒருவராக 2013-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர். 8 தடவை ஆசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்காக கலந்து கொண்ட ஒரே இந்திய வீராங்கனை.

36 வயதாகும் அனிதா பால்துரை, தற்போது 2 குழந்தைகளுக்கு தாயான நிலையிலும் இன்றளவும் நாட்டுக்காக விளையாடி வருகிறார். அனிதாவின் கணவர் பால்துரை காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் அனிதாவுக்கு 2021-ம் ஆண்டுக்கான ‘பத்மஸ்ரீ’ விருதை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் வழங்கினார்.

அண்ணாமலை வாக்குறுதி

இதையொட்டி தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் அவருக்கு பாராட்டு விழா சென்னை கமலாலயத்தில் சமீபத்தில் நடந்தது.

விழாவில் பேசிய அனிதா பால்துரை, ‘‘ இந்தியாவில் எல்லா விளையாட்டுகளுக்கும் சரிசமமாக மரியாதையும், பெயரும் கிடைப்பது கிடையாது. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், என்னை மாதிரிதான் சச்சின் தெண்டுல்கரும் 14 வயதில் விளையாட்டுத்துறையில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் இன்று அவருக்கு உள்ள பெயரும், புகழும் எப்படி இருக்கிறது? ஆனால் என்னை போன்ற வீரர்-வீராங்கனைகள் இன்றளவும் பஸ்களில் பயணித்து கொண்டுதான் இருக்கிறோம். இந்த வேறுபாடு நீங்கி, அனைத்து விளையாட்டுகளிலும் சமநிலை நிலவ வேண்டும்’’, என்று குறிப்பிட்டார்.

அப்போது பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை, ‘இனிமேல் நீங்கள் நடந்துபோக வேண்டாம். கட்சி மற்றும் தன்னார்வலர்கள் மூலம் ரூ.10 லட்சம் திரட்டி உங்களுக்கு தருகிறோம். நீங்கள் விருப்பமான காரை வாங்கி பயன்படுத்துங்கள். அதுவே எங்களுக்கு பெருமை’, என்று குறிப்பிட்டு வாக்குறுதி அளித்தார்.

ரூ.10 லட்சம் காசோலை

அதன்படி, தமிழக பா.ஜ.க. சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை, சென்னை கமலாலயத்தில் விளையாட்டு வீராங்கனை அனிதா பால்துரைக்கு, கட்சியின் துணைத்தலைவர் எம்.என்.ராஜா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அனிதாவின் கணவர் பால்துரை மற்றும் குழந்தைகளும் கலந்துகொண்டனர்.

தமிழக பா.ஜ.க. விளையாட்டுத்துறை நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, ஓ.பி.சி. அணி தலைவர் லோகநாதன், மாவட்ட தலைவர் வக்கீல் கிருஷ்ணகுமார், மாவட்ட பொறுப்பாளர் மனோகர், விளையாட்டு பிரிவு தலைவர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோரும் பங்கேற்றனர்.

Next Story