‘நீட்' தேர்வில் தேர்ச்சி பெறும் 10 மாணவர்களில் ஒருவருக்கே மருத்துவ படிப்பில் இடம்


‘நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் 10 மாணவர்களில் ஒருவருக்கே மருத்துவ படிப்பில் இடம்
x
தினத்தந்தி 30 March 2022 2:42 AM IST (Updated: 30 March 2022 2:42 AM IST)
t-max-icont-min-icon

ஒவ்வொரு ஆண்டும் ‘நீட்' தேர்வில் தேர்ச்சி பெறும் 10 மாணவர்களில் ஒருவருக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைப்பது தேசிய தேர்வு முகமையின் (என்.டி.ஏ.) புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.

சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளில் கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் தமிழகம் மட்டும் 2016-ம் ஆண்டு விலக்கு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 2017-ம் ஆணடில் இருந்து 2021-ம் ஆண்டு வரையில் நடந்து முடிந்த நீட் தேர்வை எவ்வளவு மாணவர்கள் எழுதினார்கள்? அதில் எவ்வளவு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்? என்பது போன்ற தகவல்கள் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளன.

உயர்ந்து வருகின்றன

கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையும், அதில் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. அதே சமயத்தில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இடங்கள் போதுமான அளவில் கிடைக்கும் வகையில் மருத்துவ படிப்பு இடங்களும் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகின்றன.

2020-ம் ஆண்டு 85 ஆயிரத்து 25 மருத்துவப் படிப்பு இடங்கள் இருந்த நிலையில், 2021-ம் ஆண்டு 89 ஆயிரத்து 875 ஆக அதிகரித்திருந்தது. அதேபோல், 2020-ம் ஆண்டு 7 லட்சத்து 71 ஆயிரத்து 500 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு 8 லட்சத்து 70 ஆயிரத்து 74 பேர் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

10 மாணவர்களில் ஒருவருக்கே இடம்

இந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, ஒவ்வொரு ஆண்டும் இருக்கும் மருத்துவப் படிப்பு இடங்களில், ஒரு இடத்துக்கு நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 9 முதல் 10 மாணவர்கள் வரை போட்டியிடுகின்றனர். இதில் நீட் தேர்வு மதிப்பெண் தரவரிசை பட்டியல் அடிப்படையில் சிலருக்கும், இடஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு அடிப்படையில் சிலருக்கும், குறைந்த மதிப்பெண் பெற்றாலும் நிர்வாக ஒதுக்கீட்டில் (மேனேஜ்மெண்ட் கோட்டா) சிலருக்கும் மருத்துவ படிப்பு இடங்கள் கிடைக்கின்றன.

Next Story