முன்னாள் மேயர்களை குற்றவாளிகளாக சேர்க்க கோரிய வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு


முன்னாள் மேயர்களை குற்றவாளிகளாக சேர்க்க கோரிய வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 March 2022 4:53 AM IST (Updated: 30 March 2022 4:53 AM IST)
t-max-icont-min-icon

சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்த முறைகேடு வழக்குகளில் முன்னாள் மேயர்களையும், அதிகாரிகளையும் குற்றவாளிகளாக சேர்க்க கோரிய வழக்கு திரும்ப பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்த பணி வழங்கியதில் பல முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக போலீசில் அறப்போர் இயக்கம், தி.மு.க., சார்பில் புகார் செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், 2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் மேயர்களாக பதவி வகித்தவர்களையும், அதிகாரிகளையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கவும், இதுகுறித்து கொடுக்கப்பட்ட மனுவை பரிசீலிக்கவும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் நேர்வழி இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தள்ளுபடி

இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘எந்த நடைமுறையும் தெரிந்து கொள்ளாமல், எல்லாவற்றுக்கும் பொது நல வழக்கு தொடர்வது என்பது ஐகோர்ட்டை தவறாக பயன்படுத்துவதாகும். கோரிக்கை மனுக்களை பரிசீலிக்கும்படி உத்தரவிடக்கூடாது என ஐகோர்ட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போகிறோம்’ என்றனர்.

இதையடுத்து, வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story