2-வது நாளாக பொது வேலைநிறுத்தம்: தமிழகத்தில் 89 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டன


2-வது நாளாக பொது வேலைநிறுத்தம்: தமிழகத்தில் 89 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டன
x
தினத்தந்தி 30 March 2022 5:36 AM IST (Updated: 30 March 2022 5:36 AM IST)
t-max-icont-min-icon

2-வது நாளாக பொது வேலைநிறுத்தம் நடந்த நிலையில் தமிழகத்தில் நேற்று 89 சதவீத அரசு பஸ்கள் இயங்கின. அதேவேளை வங்கி பணிகளும் வழக்கம்போல நடந்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

சென்னை,

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக்கூடாது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை தொடர வேண்டும் உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாட்கள் பொது வேலைநிறுத்தம் நேற்று முன்தினம் தொடங்கியது.

தமிழகத்திலும் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. இதில் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச., எச்.எம்.எஸ். உள்பட 10 தொழிற்சங்கங்கள் பங்கேற்று வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டன. அ.தி. மு.க.வின் அண்ணா தொழிற்சங்கம், பா.ஜ.க. தொழிற்சங்கம் உள்பட சில தொழிற்சங்கங்கள் மட்டும் பங்கேற்கவில்லை.

இந்த போராட்டத்தில் எல்.ஐ.சி., வங்கி ஊழியர்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் போன்ற பொதுத்துறை ஊழியர்கள் சம்மேளனங்களும் பங்கேற்றுள்ளன.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

முதல் நாள் போராட்டத்தில் ஏராளமான வங்கி ஊழியர்கள் பங்கேற்றதால் வங்கி சேவைகள் முற்றிலும் முடங்கியது. இதனால் ஊழியர்கள் இன்றி வங்கிகள் வெறிச்சோடின. பண பரிவர்த்தனை நிறுத்தப்பட்டதால் பல ஏ.டி.எம்.கள் நேற்று முன்தினம் செயல்படாமல் போனது. காசோலைகள் மீதான சேவைகள் முடங்கியது. பணம் எடுப்பது, போடுவது போன்ற பணிகளும் பாதிக்கப்பட்டன. அதேபோல பஸ் சேவைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் 31 சதவீத அரசு பஸ்களே இயக்கப்பட்டன.

பஸ் சேவை முடங்கியதால் சென்னையில் பயணிகள் பார்வை மெட்ரோ மற்றும் மின்சார ரெயில் சேவைகளின் மீது பதிந்தது. இதனால் நேற்று முன்தினம் மெட்ரோ-மின்சார ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதேவேளை ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்சிகளின் படையெடுப்பும் சாலைகளில் மிகுதியாக இருந்தது. இந்த பொது வேலைநிறுத்தத்தால் நேற்று முன்தினம் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகத்துக்கு செல்லும் ஊழியர்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதனால் நேற்று முன்தினம் மக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று பாதிப்பு ஏற்பட்டது.

வங்கி சேவைகள்

இந்தநிலையில் பொது வேலைநிறுத்தம் 2-வது நாளாக நேற்றும் நடந்தது. ஆனால் வங்கிகள் ஓரளவு திறந்திருந்தன. அந்த வங்கிகளில் காசோலைகள், வரைவோலை சார்ந்த பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.

பணம் போடுவது, எடுத்தல் தொடர்பான சேவைகள் நடைபெறவில்லை. பெரும்பாலான வங்கிகளில் குறைவான அளவில் ஊழியர்கள் பணியாற்றினர். அதேவேளை பல ஏ.டி.எம். மையங்கள் நேற்று செயல்படவில்லை. வங்கிகளில் மக்களின் வருகையும் இருந்தது.

89 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன

குறிப்பாக தமிழகம் முழுவதும் நேற்று பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த வகையில் தமிழகத்தில் மொத்தமுள்ள 16,452 பஸ்களில் 14,692 பஸ்கள் (89.30 சதவீதம்) நேற்று இயக்கப்பட்டன. சென்னையில் மட்டும் மொத்தமுள்ள 3,175 பஸ்களில் 2,058 பஸ்கள் (64.82 சதவீதம்) நேற்று இயக்கப்பட்டன. இதனால் நேற்று முன்தினம் பஸ்கள் இன்றி வெறிச்சோடி கிடந்த பஸ் நிலையங்கள் நேற்று மீண்டும் பரபரப்புடன் காட்சியளித்தன. மாணவ-மாணவிகள் பள்ளி-கல்லூரிகளுக்கும், ஊழியர்கள் அலுவலகங்களுக்கும் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடிந்தது.

இதனால் பயணிகளின் சிரமம் தவிர்க்கப்பட்டது. மேலும் தபால், எல்.ஐ.சி. போன்ற மத்திய அரசின் அலுவலக பணிகளும் நேற்று வழக்கம்போலவே நடந்தன. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

ஆர்ப்பாட்டம்

சென்னை பாரிமுனை குறளகம் அருகே அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதேபோல மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் முன்பாக ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டன. வேலைநிறுத்த போராட்டம் அமலில் இருந்தாலும் நேற்று மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் வழக்கம்போல பணிகள் நடைபெற்றன. 80 சதவீத ஊழியர்கள் நேற்று பணிக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story