வகுப்பறையின் வெளியே நிற்க வைத்து அவமானப்படுத்தியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை....!
நாகை அருகே வகுப்பறையின் வெளியே நிற்க வைத்து அவமானப்படுத்தியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
நாகூர்,
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அமிர்தா நகர் பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளி சுப்பிரமணி. இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதிகளின் 3-வது மகள் சுபாஷினி (வயது 19) . இவர் நாகை அடுத்துள்ள பாப்பாக்கோவில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபிஸ்ட் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் முதலாம் ஆண்டு கடைசி பருவ தேர்வு வருவதால் கல்லூரி நிர்வாகம் உடனடியாக மீதமுள்ள ரூ.50 ஆயிரம் கல்வி கட்டணத்தை கட்ட வேண்டுமென வற்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பணம் கட்டாத மாணவிகளை கட்டாய விடுப்பு அளித்ததுடன் கல்லூரிக்கு வந்த மாணவிகளை வகுப்பறையின் வெளியே நிற்க வைத்து அவமான படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முதலாம் ஆண்டு பயிலும் மாணவி சுபாஷினி இன்று காலை வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயலை கண்டு ஆத்திரம் அடைந்த உறவினர்கள் நாகூர் - நாகை தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாகூர்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். கல்வி கட்டணத்தை கட்ட சொல்லி தொல்லை கொடுத்து, மாணவி தற்கொலைக்கு காரணமாக இருந்த கல்லூரி நிர்வாகம் மற்றும் தாளாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story