தமிழ்ப் பண்பாடு உலகத்திற்கே வழிகாட்டுகிறது புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு


தமிழ்ப் பண்பாடு உலகத்திற்கே வழிகாட்டுகிறது புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
x
தினத்தந்தி 31 March 2022 3:28 AM IST (Updated: 31 March 2022 3:28 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்ப் பண்பாடு உலகத்திற்கே வழிகாட்டுகிறது என்று தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்த பாரதியார் நினைவு நூற்றாண்டு ஆய்வரங்கில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வரங்கு 2 நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை தாங்கினார். அயல்நாட்டு தமிழ்க்கல்விதுறை பேராசிரியர் குறிஞ்சிவேந்தன் முன்னிலை வகித்தார்.

விழாவில் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு ஆய்வரங்க கட்டுரையை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நமது பண்பாடு

பாரதியின் தமிழ்ப்பற்று நம் எல்லோருக்கும் தெரியும். இன்றைக்கு உலகமே நமது பண்பாட்டை பின்பற்ற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். ஏனென்றால் வெளிநாடுகளில் ஒருவரை ஒருவர் பார்த்தால் கைகளை குலுக்கி கொள்வார்கள். ஆனால் பண்டைய தமிழகத்தில் வணக்கத்தை சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். இன்று உலக நாடுகள் இதை பின்பற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள். தமிழ்ப் பண்பாடு உலகத்திற்கே வழிகாட்டிக்கொண்டு இருக்கிறது.

நிலத்தை பார்த்து கொண்டு தான் பெண்கள் நடக்க வேண்டும் என்று இருந்த காலத்தில் நேர்கொண்ட பார்வையுடன் நட என்று சொன்னவர் பாரதி. அந்த பாரதிக்கு ஒவ்வொரு பெண்ணும் கடமைப்பட்டு இருக்க வேண்டும். தமிழின் பெருமையை பறைசாற்ற வேண்டும். பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் தமிழ்மொழியை பயன்படுத்துவதை பார்த்தால் பயமாக இருக்கிறது.

தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டும்

நான் இங்கே வரும்போது இணையதளத்தில் ஒன்றை பார்த்துக்கொண்டு வந்தேன். பேரறிஞர் அண்ணா விருது வாங்கிய ஒருவர், என்னை பற்றி ஒருமையில் பேசுகிறார். இவளெல்லாம் 2 மாநிலத்திற்கு கவர்னர் என்று பேசுகிறார்.

2 மாநிலத்திற்கு ஒரு பெண் கவர்னராக இருப்பது எவ்வளவு சிரமமான காரியம். அதுவும் தமிழச்சி ஒருவர் 2 மாநிலத்தை ஆண்டு கொண்டு இருக்கிறார் என ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்.

தமிழுக்கு மரியாதை

தயவு செய்து திட்டுவதாக இருந்தாலும் தமிழில் மரியாதையுடன் திட்டுங்கள். என் தமிழுக்கு மரியாதை உண்டு. யாராக இருந்தாலும், எந்த கொள்கை உடையவராக இருந்தாலும், மாற்று கருத்து உள்ளவர்களாக இருந்தாலும் தமிழை வணங்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் வி.ஜி.பி உலக தமிழ் சங்க தலைவர் வி.ஜி. சந்தோஷம், சென்னை வானவில் பண்பாட்டு மையம் கே.ரவி ஆகியோர் பேசினர். முன்னதாக தமிழ்ப்பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சங்கர் வரவேற்றார். முடிவில் இலங்கை பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்ரீபிரசாந்தன் நன்றி கூறினார்.


Next Story