கைதானவர்களை சிறையில் சந்தித்த விவகாரம்: டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம் ரத்து


கைதானவர்களை சிறையில் சந்தித்த விவகாரம்: டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம் ரத்து
x
தினத்தந்தி 1 April 2022 3:27 AM IST (Updated: 1 April 2022 3:27 AM IST)
t-max-icont-min-icon

கைதானவர்களை சிறையில் சந்தித்த விவகாரம்: டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம் ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் செய்த ஏ.பி.வி.பி., அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

புழல் சிறையில் உள்ள இவர்களை, சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றும் டாக்டர் சுப்பையா சந்தித்தார். இவரது செயல், அரசு ஊழியருக்கான நடத்தை விதியை மீறும் விதமாக உள்ளது என்று குற்றம்சாட்டி, அவரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குனர், சுகாதார துறை செயலாளர் ஆகியோர் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் சுப்பையா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் விசாரித்தார்.

அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் விஜய்நாராயண், வக்கீல்கள் ரபு மனோகர், எஸ்.திவாகர் ஆகியோர் ஆஜராகினர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “மனுதாரரை பணியிடை நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்கிறேன். அவருக்கு அனைத்து பண பலன்களுடன் மீண்டும் பணி வழங்க வேண்டும். அவருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரணையை அதிகாரிகள் 12 வாரத்துக்குள் முடிக்க வேண்டும். இந்த விசாரணைக்கு மனுதாரரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Next Story