அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு ஆவணங்களை வழங்க மறுத்த சிறப்பு கோர்ட்டு உத்தரவு ரத்து


அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு ஆவணங்களை வழங்க மறுத்த சிறப்பு கோர்ட்டு உத்தரவு ரத்து
x
தினத்தந்தி 1 April 2022 4:22 AM IST (Updated: 1 April 2022 4:22 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு ஆவணங்களை அமலாக்கத்துறைக்கு வழங்க மறுத்த சிறப்பு கோர்ட்டு உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

சென்னை,

தற்போது அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜி, கடந்த 2011-15-ம் ஆண்டுகளில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

ஆவணம் வேண்டும்

இதற்கிடையில், செந்தில்பாலாஜி மீது மத்திய அமலாக்கத்துறை சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் வழக்கை பதிவு செய்தது. இதற்காக, செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் குறியீடு செய்யாத ஆவணங்களை வழங்க வேண்டும் என்று சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை துணை இயக்குனர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கீழ் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.

உத்தரவு ரத்து

இந்த வழக்கை நீதிபதி பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் விசாரித்தனர். அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில் ஐகோர்ட்டுக்கு உதவும் நபராக மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா செயல்பட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சான்றளிக்கப்பட்ட குறியீடு செய்யப்படாத ஆவணங்களை வழங்க மறுப்பு தெரிவித்த சிறப்பு கோர்ட்டு உத்தரவை ரத்து செய்கிறோம். அந்த ஆவணங்களைப் பெற அமலாக்கத்துறையினர் சிறப்பு கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யலாம் என்று தீர்ப்பு அளித்துள்ளனர்.

Next Story