விருதுநகரில் மாபெரும் ஜவுளிப் பூங்கா அமைக்க அனுமதி மத்திய மந்திரியிடம் முதல்-அமைச்சர் கோரிக்கை


விருதுநகரில் மாபெரும் ஜவுளிப் பூங்கா அமைக்க அனுமதி மத்திய மந்திரியிடம் முதல்-அமைச்சர் கோரிக்கை
x
தினத்தந்தி 2 April 2022 4:27 AM IST (Updated: 2 April 2022 4:27 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் மாபெரும் ஜவுளிப் பூங்கா அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி பியூஷ் கோயலிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் நேற்று மத்திய வணிகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை மந்திரி பியூஷ் கோயலை சந்தித்து, தமிழகத்தின் வணிகம் மற்றும் தொழில் துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உலக சந்தையில் போட்டி போடும் அளவிற்கு ஜவுளித் தொழிலை கொண்டு வரும் வகையில், அதிலுள்ள போக்குவரத்து செலவை குறைத்து, தொழில் வளர்ச்சியை உருவாக்குவதற்காக, நாட்டின் பல்வேறு இடங்களில் பிரமாண்ட ஜவுளிப் பூங்காக்களை உருவாக்குவதற்கு மத்திய அரசு முன்வந்துள்ளது.

மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை அருகே 1,052 ஏக்கர் நிலப்பரப்பை, பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்காவை (பிஎம்-மித்ரா) அமைக்க தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது.

எனவே விருதுநகரில் இ.குமரலிங்கபுரத்தில் உள்ள அந்த இடத்தில் மாபெரும் ஜவுளிப் பூங்காவை அமைக்க அனுமதி வழங்க வேண்டும். காலணி உற்பத்தித் தொழிலில், புதிய உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்தை (பிஎல்ஐ) செயல்படுத்த வேண்டும்.

மின்சார பேட்டரி உற்பத்தி

இந்தியாவில் மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்து வருகிறது. ஹூண்டாய், மாருதி, டிவிஎஸ், ஓலா, ஹீரோ எலக்ட்ரிக், ரெனால்ட் நிசான், அதர் எனர்ஜி போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

எனவே லித்தியம் பேட்டரி தயாரிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. எனவே பிஎல்ஐ திட்டத்தின் கீழ் அதற்கான உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டம் வாயலூரில் உள்ள காமராஜர் துறைமுகத்திற்கு அருகேயுள்ள 3,542 ஏக்கர் நிலத்தை உப்புத் துறைக்கு மாற்றம் செய்ய தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை (டிபிஐஐடி) உத்தரவிட்டு இருந்தது. அதில் 1,513 ஏக்கர் நிலம் டிட்கோவிற்கு மாற்றப்பட்டது.

நிலத்திற்கான தொகையில் குறிப்பிட்ட பகுதியை டிபிஐஐடி-க்கு டிட்கோ வழங்கிவிட்டது. மீதமுள்ள தொகை விரைவில் வழங்கப்பட்டுவிடும். எனவே பொன்னேரி தொழிற்சாலைகள் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் வகையில் மீதமுள்ள 2 ஆயிரம் ஏக்கர் உப்புத் துறை நிலத்தை டிட்கோவிற்கு வழங்க உத்தரவிட வேண்டும்.

புழுங்கல் அரிசி

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஸ்டீல் மிகத் தேவையான மூலப் பொருளாகும். கடந்த 2 ஆண்டுகளாக அதன் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது. கடந்த சில மாதங்களாக அதன் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது.

உள்ளூர் தேவைக்கு போக மீதமுள்ளதை மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும். எனவே மத்திய அரசு இதில் உடனே தலையிட்டு ஸ்டீல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் உபரியாக உள்ள ஒரு லட்சம் மெட்ரிக் டன் பச்சரிசியை இந்த மாதத்தில் இருந்து இந்திய உணவுக் கழகத்திடம் வழங்கிவிட்டு, அதற்குப் பதிலாக அதே அளவில் புழுங்கல் அரிசியை பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். அதுபோல அரிசி அரவை மானியமாக தமிழகத்திற்கு தர வேண்டிய பாக்கியுள்ள ரூ.4,446.14 கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story