பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த வழக்கில் சென்னை நந்தனத்தை சேர்ந்த கருக்கா வினோத் என்ற ரவுடி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தையடுத்து பா.ஜ.க. அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த பாபா யூசுப் (வயது 46) முகநூல் பக்கத்தில் கொலை மிரட்டல் விடுத்து பதிவு வெளியிட்டிருந்தார். அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். தற்போது அண்ணாமலை தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு அதிரடி கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன் வைத்து வருகிறார்.
இந்த நிலையில் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கருதியது. இதுதொடர்பாக நுண்ணறிவு துறையினரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டது. அதனடிப்படையில் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து அண்ணாமலைக்கு சி.ஆர்.பி.எப். என்று அழைக்கப்படும் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 11 பேர் பாதுகாப்பு வழங்குவார்கள். நாளை (திங்கட்கிழமை) முதல் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
ஐ.பி.எஸ். பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக பா.ஜ.க. துணை தலைவராக அண்ணாமலை பதவி வகித்தபோது அவருக்கு ‘ஒய்’ பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்த பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது. தற்போது அண்ணாமலையின் வீடு மற்றும் அவர் தங்கும் இடங்களில் தமிழக போலீஸ் பிரிவை சேர்ந்த 4 ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் அவருக்கு வழங்கப்படும் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு என்பது இந்தியாவில் உள்ள 4-வது பாதுகாப்பு பிரிவாகும்.
Related Tags :
Next Story