இறுதியாண்டு என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க திட்டம்


இறுதியாண்டு என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க திட்டம்
x
தினத்தந்தி 4 April 2022 12:32 AM IST (Updated: 4 April 2022 12:32 AM IST)
t-max-icont-min-icon

வரும் கல்வியாண்டில் இருந்து இறுதியாண்டு என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் முறையான உள்கட்டமைப்பை உருவாக்கி, வரும் கல்வியாண்டு முதல் பிற மொழி வகுப்புகளை நடத்த திட்டமிட்டு இருக்கின்றன.

அதன்படி கோவை, சேலம், திருநெல்வேலி, காரைக்குடி, போடிநாயக்கனூர், தர்மபுரி, பர்கூர், திருச்சி, செங்கிப்பட்டி மற்றும் வேலூரில் தலா ஒரு கல்லூரியில் வெளிநாட்டு மொழி பயிற்சி மையங்களை நிறுவுவதற்கான பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு இருப்பதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு 5 வெளிநாட்டு மொழிகளில் பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதில் முதல்கட்டமாக ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகள் மட்டும் கற்பிக்கப்பட உள்ளதாகவும், 2-ம் கட்டத்தில் ரஷிய, சீன (மாண்டரின்) மொழிகள் கற்பிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்வி ஆதரவை வழங்க...

சிறந்த வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கு தேவையான போதிய கல்வி ஆதரவை வழங்குவதற்கு ஏதுவாக இந்த வெளிநாட்டு மொழிகள் கற்பிக்கப்பட உள்ளது என்றும், இதற்கான வகுப்புகளை நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட பயிற்சி நிறுவனங்களிடம் (ஏஜென்சிகள்) இருந்து அவர்களின் ஆர்வம் கேட்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவற்றில் சிறந்த பயிற்சி நிறுவனத்தை தேர்வு செய்து மாணவர்களுக்கு இந்த மொழிகள் ஆன்லைன், ஆப்லைன் அல்லது இரண்டையும் இணைத்த முறைகள் மூலம் கற்றுத்தரப்பட இருக்கின்றன. இதற்கான பாடநெறிகள் அனைவருக்கும் பொதுவானதாகவும், சர்வதேச தரத்துக்கு இணையாகவும் அமைக்கப்படும். இது மாணவர்களுக்கான என்ஜினீயரிங் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்காது. ஆர்வமுள்ள மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.

இதற்காக மாணவர்களிடையே தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

Next Story