கார்-லாரி மோதல்; 4 பேர் பலி


கார்-லாரி மோதல்; 4 பேர் பலி
x
தினத்தந்தி 4 April 2022 2:40 AM IST (Updated: 4 April 2022 2:40 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நிதிநிறுவன அதிபர் உள்பட 4 பேர் பலியானார்கள்.

பெரம்பலூர்,

கள்ளக்குறிச்சி தீர்த்தாலு நகர் பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (வயது 45). இவர் கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து, தற்போது வரை கதிரவன் சொந்த ஊரில் வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கதிரவன் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், சமயபுரத்தில் உள்ள கோவில்களுக்கு சென்று வருவதற்காக நேற்று காலை தனது மகன் சந்திரவதனன் (13), தாய் தமிழரசி (65), நிதிநிறுவன அதிபரும், தனது தம்பியுமான கார்முகில் (40), அவரது மகன் லிங்கநேத்திரன் (8), நண்பரான கள்ளக்குறிச்சி கண்ணன் (45), அவரது மனைவி வேதவள்ளி (40), அவர்களின் மகன்கள் கிஷோர் (12), திவாகர் (6) ஆகியோருடன் ஒரே காரில் அதிகாலை புறப்பட்டு சென்றார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்

முதலில் அவர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு, இனாம் சமயபுரம் கண்ணப்புரம் ஆதி மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். பின்னர் பெரம்பலூரில் ஆயுர்வேத சிகிச்சைக்காக ஒரு டாக்டரை சந்தித்து விட்டு கள்ளக்குறிச்சிக்கு செல்லலாம் என்று புறப்பட்டுள்ளனர். காரை கதிரவன் ஓட்டினார்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், விஜயகோபாலபுரத்தை தாண்டி சிறுவாச்சூர் மலையப்ப நகர் பிரிவு ரோடு அருகே கார் சென்றது.

கார்-லாரி நேருக்கு நேர் மோதல்

இவர்கள் மதிய உணவு வீட்டில் இருந்தே எடுத்து வந்துள்ளனர். அதனை பெரம்பலூர் சாய்பாபா கோவில் அருகே அமர்ந்து சாப்பிட்டு விட்டு செல்லலாம் என்று எண்ணியிருந்தனர். அப்போது அதே சாலையில் கதிரவனின் காருக்கு பின்னால் இடதுபுறமாக வந்த ஒரு கார் திடீரென்று முந்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் கதிரவன் அந்த கார் மீது மோதாமல் இருப்பதற்காக வலதுபுறமாக திருப்பியுள்ளார். அப்போது எதிரே தடுப்புச்சுவர் இல்லாததால் அடுத்த சாலைக்கு கதிரவன் கார் சென்றது.

அப்போது எதிரே பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பூலாம்பாடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி கொண்டு, திருச்சி நோக்கி லாரி ஒன்று சென்றது. லாரியின் டிரைவரும் எதிரே வந்த காரின் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்துள்ளார். ஆனால் லாரி நிற்காமல், காரின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

4 பேர் பலி

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும், ஒரு மின்கம்பமும் முறிந்தது. காரினுள் இடிபாடுகளுக்கிடையே சிக்கியதில், கதிரவனின் தம்பி கார்முகில், அவரது மகன் லிங்கநேத்திரன், நண்பர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த கதிரவன், அவரது மகன் சந்திரவதனன், தாய் தமிழரசி, கண்ணன் மனைவி வேதவள்ளி, அவர்களது மகன் கிஷோர் ஆகியோர் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இந்த விபத்தில் கண்ணனின் 2-வது மகன் திவாகருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.

தகவல் அறிந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை காரில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி தமிழரசி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது.

Next Story