நான் முழுமையாக மீண்டு வந்துவிட்டேன் ‘எனது உடல்நலம் குறித்து விசாரித்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி’


நான் முழுமையாக மீண்டு வந்துவிட்டேன் ‘எனது உடல்நலம் குறித்து விசாரித்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி’
x
தினத்தந்தி 4 April 2022 4:43 AM IST (Updated: 4 April 2022 4:43 AM IST)
t-max-icont-min-icon

நான் முழுமையாக மீண்டு வந்துவிட்டேன் ‘எனது உடல்நலம் குறித்து விசாரித்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி’ - சீமான் அறிக்கை.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பணிச்சுமை, அலைச்சல், உணவருந்தாமை ஆகியவற்றாலும், அதிகப்படியான வெயிலின் தாக்கத்தினாலும் திருவொற்றியூர் மக்கள் சந்திப்பின் இடையே நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எனக்கு சற்று உடல்நல குறைவு ஏற்பட்டது. ஒரு சில நிமிடங்களில், அந்த சோர்விலிருந்தும், மயக்க நிலையிலிருந்தும் முழுமையாக விடுபட்டுவிட்டாலும், என் மீது பேரன்பும், பெரும் அக்கறையும், பெருத்த நம்பிக்கையும் கொண்ட உலகம் முழுவதும் வாழும் என்னுயிர் தமிழ்ச்சொந்தங்கள், என்னுடைய உடன்பிறந்தார்கள், எனது உயிர்க்கினிய எனது தம்பி, தங்கைகள், பாசத்திற்குரிய பெற்றோர்கள் என யாவரும் பெரும் கவலையடைந்து, பதற்றம் அடைந்ததையும், மனம் வருந்தி துயருற்றதையும் நன்றாக அறிவேன்.

தற்போது முழுமையாக மீண்டு வந்து, முழு உடல்நலத்தையும் பெற்று வந்துவிட்டேன். உடல் நலிவுற்றபோது எனக்கு உளவியல் துணையாக நின்ற அத்தனைபேருக்கும் எனது உளப்பூர்வமான நன்றியினையும், அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில், மக்களுக்கான போராட்டங்களங்களிலும், கருத்துப்பரப்புரைகளிலும், கட்சியின் வளர்ச்சிக்கான களப்பணிகளிலும் உங்களோடு இணைகிறேன்.

மேலும், எனது உடல்நலம் குறித்து அக்கறையோடு நலம் விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. இளைஞர் அணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மதுரை ஆதீனம் ஆகியோருக்கு எனது அன்பினையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story