உணவு தேடி வந்தபோது சோகம்: கிணற்றில் தவறி விழுந்து யானை சாவு


உணவு தேடி வந்தபோது சோகம்: கிணற்றில் தவறி விழுந்து யானை சாவு
x
தினத்தந்தி 5 April 2022 1:30 AM IST (Updated: 5 April 2022 1:30 AM IST)
t-max-icont-min-icon

உணவு தேடி வந்த ஆண் யானை கிணற்றில் தவறி விழுந்து இறந்தது.

சேலம்,

தமிழக- கர்நாடக வன எல்லையில் சேலம் மாவட்டம், கொளத்தூரை அடுத்து உள்ளது, லக்கம்பட்டி. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமத்தில், திறந்தவெளி கிணறுகள் வெட்டப்பட்டு விவசாய பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று அங்கிருந்த விவசாய கிணற்றின் அருகே சென்றது.

சுமார் 50 அடி ஆழமுள்ள அந்த விவசாய கிணற்றில் 40 அடி வரை தண்ணீர் நிறைந்திருந்தது. அந்த கிணற்றில் எதிர்பாராதவிதமாக ஆண் யானை தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்து மூழ்கியது. இதில் அந்த யானை பரிதாபமாக இறந்தது.

உடல் மீட்பு

இந்நிலையில், நேற்று காலை அந்த கிணற்று பகுதிக்கு சென்ற பொதுமக்கள் யானை கிணற்றுக்குள் செத்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து மேட்டூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வனத்துறையினர், மேட்டூர் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த யானையின் உடலை பொதுமக்கள் உதவியுடன் ராட்சத கிரேனில் கயிறு கட்டி மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றி சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானையின் உடல் மீட்கப்பட்டது.

பின்னர் யானையின் உடல் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டது.

Next Story