6 மாதங்களுக்குள் டாஸ்மாக் பார்களை மூடவேண்டும் என்ற தீர்ப்புக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு


6 மாதங்களுக்குள் டாஸ்மாக் பார்களை மூடவேண்டும் என்ற தீர்ப்புக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 6 April 2022 4:53 AM IST (Updated: 6 April 2022 4:53 AM IST)
t-max-icont-min-icon

6 மாதங்களில் டாஸ்மாக் பார்களை மூடவேண்டும் என்ற தனி நீதிபதி தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் அருகில் செயல்படும் மதுபான பார்களில் தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி மது பாட்டில்களை சேகரிப்பதற்கான புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தது.

இதை எதிர்த்து, ஏற்கனவே டெண்டர் எடுத்த பார் உரிமையாளர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், கொரோனா ஊடரங்கு காரணமாக மதுபான பார்கள் பல மாதங்கள் மூடப்பட்டதால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, மேலும் 2 ஆண்டுகளுக்கு எங்களுக்கே பார் டெண்டர் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

மூடவேண்டும்

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சி.சரவணன், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ் டாஸ்மாக் கடைகளில் சில்லரையாக மதுபானங்களை விற்பனை செய்வதற்கு மட்டுமே அனுமதி உள்ளது. பொது இடங்களில் வைத்து மதுபானம் அருந்த அனுமதியில்லை என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான பார்களை 6 மாதங்களில் மூடவேண்டும். அல்லது இதுதொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று அதிரடி தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

வேறு கோரிக்கை

அப்போது டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘இந்த வழக்கில் பார்களின் குத்தகையை கேட்டுத்தான் மனுதாரர்கள் வழக்கு தொடர்ந்தனர். பார்களை மூட கோரிக்கை விடுக்கவில்லை. ஆனால் கோரிக்கைக்கு அப்பாற்பட்டு, பார்களை 6 மாதங்களில் மூடவேண்டும் என்ற உத்தரவை தனி நீதிபதி பிறப்பித்துள்ளார்.

எனவே, தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும். டாஸ்மாக் சார்பில் மதுபானக்கடைகளின் அருகில் பார்களை நடத்த அதிகாரம் உள்ளது’ என்று வாதிட்டார்.

இடைக்கால தடை

அதையடுத்து நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். டாஸ்மாக் நிறுவனம் பார் நடத்துவதற்கான டெண்டர் கோரலாம் என உத்தரவிட்டு, விசாரணையை 2 வார காலத்துக்கு தள்ளிவைத்தனர்.

Next Story