கோவை: ரூ. 20-க்காக நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டலை சூறையாடிய வாலிபர்...!


கோவை: ரூ. 20-க்காக நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டலை சூறையாடிய வாலிபர்...!
x
தினத்தந்தி 6 April 2022 1:30 PM IST (Updated: 6 April 2022 1:14 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் ரூ. 20-க்காக நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டலை சூறையாடிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

கோவை தடாகம் சாலையில் கே.என்.ஜி புதூர் பகுதியில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்திற்கு அதே பகுதியை சேர்ந்த பிரதீப் (22) என்ற இளைஞர் மது போதையில் உணவு சாப்பிட சென்றுள்ளார். அவர் ரூ.520-க்கு சாப்பிட்டு விட்டு ரூ.500 மட்டுமே பணம் கொடுத்துள்ளார்.

மீதம் 20 ரூபாய் எங்கே என உணவக ஊழியர் கேட்டுள்ளார். இதற்கு மேல் தன்னிடம் பணம் இல்லை என்றும் இதை உங்களால் வாங்கிக்கொள்ள முடியாதா என பிரதீப் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

கோபம் குறையாத பிரதீப், சிறிது நேரம் கழித்து உணவகத்தை மூடும் நேரத்தில் தனது நண்பர்களை சரக்கு வாகனத்தில் அழைத்து வந்து காலி மதுபாட்டில்களை உணவகத்திற்குள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். அத்துடன் உணவகத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த உணவக உரிமையாளரின் காரையும் தாக்கி உணவகத்தில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த உணவக கேசியர் பழனிசாமியை சக ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து கேசியர்  அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட பிரதீப் அவரது நண்பர்கள் ஸ்ரீகிருஷ்ணேஷ்வரன் (21), அஜித் குமார் (22) ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். தலைமறைவான 6 நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story