7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்கு - ஐகோர்ட்டில் நாளை தீர்ப்பு
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
சென்னை,
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த ஆட்சியில் தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் அரசு தரப்பு வாதத்தின் போது, தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்களுக்குச் சென்று பயிற்சி பெற முடியும், ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களால் பயிற்சி மையங்களுக்குச் சென்று பயிற்சி பெற முடியாது என்பதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், இட ஒதுக்கீட்டுக்காக பள்ளிகளை அரசு மற்றும் தனியார் என இரு வகையாக பிரிப்பது சட்டப்படி அனுமதிக்கத்தக்கது என்றும் அதன் அடிப்படையில் பின்தங்கிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதே சமயம் அரசு பள்ளி மாணவர்களை கருத்தில் கொண்ட தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தங்களை கவனத்தில் கொள்ள தவறிவிட்டன என்று தனியார் பள்ளி மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப் போல இலவச சீருடை, புத்தகங்கள், காலணி உள்ளிட்டவை அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் வழங்கப்படுவதாகவும், எனவே தங்களுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப் போல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நாளை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரதன் சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நாளை காலை 10.30 மணியளவில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story