நீட் தேர்வு விண்ணப்பக் கட்டணம் உயர்வு - தேசிய தேர்வு முகமை
நீட் தேர்வு விண்ணப்பக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.
சென்னை,
2022-23-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வருகிற ஜூலை மாதம் 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவில் 543 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடத்தப்பட இருப்பதாக தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவித்து உள்ளது.
இந்த தேர்வுக்கு அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த அடுத்த மாதம் 7-ந் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், நீட் தேர்வு விண்ணப்பக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.
இது குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வின் கட்டணம் கடந்த ஆண்டை விட ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கான கட்டணம் ரூ.1,500-லிருந்து ரூ. 1,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
EWS, OBC பிரிவினருக்கு ரூ.1,400-லிருந்து 1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர், 3-ம் பாலினத்தவருக்கான கட்டணம் ரூ.800-லிருந்து 900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் ரூ.8,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர இணைய வழிக்கட்டணத்துக்கான செலவு, ஜி.எஸ்.டி வரியையும் தேர்வர்கள் தனியே செலுத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story