மதுரை-செகந்திராபாத் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்


மதுரை-செகந்திராபாத் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்
x
தினத்தந்தி 7 April 2022 10:26 PM GMT (Updated: 2022-04-08T03:56:42+05:30)

மதுரை-செகந்திராபாத் இடையே கோடைகால வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

மதுரை,

தென் மத்திய ரெயில்வே மண்டலம் சார்பில் பயணிகளின் வசதிக்காக, மதுரையிலிருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நகருக்கு கோடைகால வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது. அதன்படி இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.07191) செகந்திராபாத்தில் இருந்து வருகிற 11, 18, 25-ந் தேதி திங்கட்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8.45 மணிக்கு மதுரை வந்து சேரும். 

மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வ.எண்.07192) வருகிற 13, 20, 27-ந் தேதிகளில் புதன்கிழமைகளில் மதுரையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.25 மணிக்கு செகந்திராபாத் ரெயில் நிலையம் சென்றடையும். 

இந்த ரெயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நலகொண்டா ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். 

ரெயில்களில் ஒரு 2 அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 3 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 பார்சல் வேனுடன் இணைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

Next Story