ரூ.10 லட்சம் கேட்டு பள்ளி மாணவி ஆட்டோவில் கடத்தல்: பட்டதாரி பெண் கைது


ரூ.10 லட்சம் கேட்டு பள்ளி மாணவி ஆட்டோவில் கடத்தல்: பட்டதாரி பெண் கைது
x
தினத்தந்தி 8 April 2022 5:50 AM IST (Updated: 8 April 2022 5:50 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் ரூ.10 லட்சம் கேட்டு, பள்ளிக்கூட வாசலில் வைத்து 10-ம் வகுப்பு மாணவி ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்டார். 4 மணி நேரத்தில் போலீசார் கடத்தப்பட்ட மாணவியை பத்திரமாக மீட்டனர். கடத்திய பட்டதாரி பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் வடபழனியை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பகல் 1 மணி அளவில் பள்ளிக்கூடம் முடிந்து அந்த மாணவி வெளியில் வந்தார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் அவரிடம் அன்பாக பேசினார். உனது தாயாரும், நானும் சிறு வயது தோழிகள், உன்னை அழைத்துவர வந்தேன். வா, போகலாம் என்று மாணவியை தயாராக நின்ற ஆட்டோவில் ஏற்றிச்சென்றார்.

தாயாரின் தோழி என்று சொன்னதும், மாணவியும் மறுப்பு ஏதும் சொல்லாமல் ஆட்டோவில் ஏறிச்சென்று விட்டார்.

ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்

மாணவி வழக்கமாக வேன் ஒன்றில் வீட்டுக்கு செல்வார். அவரை ஏற்றிச்செல்ல வேன் டிரைவர் காத்திருந்தார். மற்ற மாணவிகள் வந்து விட்டனர். இந்த மாணவி மட்டும் வேனில் ஏற வரவில்லை.

இதனால் பொறுமை இழந்த வேன் டிரைவர் பள்ளி முதல்வரிடம் சென்று மாணவியை காணவில்லை. வேனில் ஏறுவதற்கு வரவில்லை என்று தகவல் சொன்னார். உடனே மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பதறியபடி பள்ளிக்கு வந்தனர்.

அப்போது பிற்பகல் 2 மணி. பள்ளி முதல்வரிடம் பேசிக்கொண்டு இருந்தபோதே, மாணவியின் தந்தை செல்போனில் பெண் ஒருவர் பேசினார்.

உங்கள் மகளை கடத்தி வந்துள்ளோம். விஷயத்தை வெளியில் குறிப்பாக போலீசுக்கு தெரிவிக்காமல், ரூ.10 லட்சத்தை தயார் செய்யுங்கள். ரூ.10 லட்சத்தை நான் சொல்லும் இடத்திற்கு வந்து அடுத்த அரை மணி நேரத்தில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்கள் மகளின் உடல்தான் வீடு தேடி வரும். உங்கள் மகள் பத்திரமாக எங்களிடம் இருக்கிறாள், என்று கூறிவிட்டு, மிரட்டிய பெண் போனை வைத்து விட்டார்.

போலீசில் புகார்

பதற்றம் அடைந்த மாணவியின் தந்தை உடனடியாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால், அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.

அதோடு இந்த விஷயம் வெளியில் தெரியாமல் பார்த்துக்கொண்டார். மாணவியின் தந்தைக்கு செல்போனில் பேசி மிரட்டிய பெண்ணின் செல்போன் எண்ணை வைத்து, அவர் இருக்கும் இடத்தை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து விட்டனர்.

உடனடியாக கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன், இணை கமிஷனர் பிரபாகரன், துணை கமிஷனர் பகலவன் ஆகியோர் மேற்பார்வையில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ரவி ஆபிரகாம், இன்ஸ்பெக்டர்கள் சேட்டு, மோகன்தாஸ் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை போலீசார் களத்தில் இறங்கினர்.

கண்காணிப்பு

மாணவியை கடத்திச்சென்ற ஆட்டோ எங்கெங்கு செல்கிறது என்பதை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்தபடி இருந்தனர். ஆட்டோ செல்லும் இடத்தை 3 தனிப்படை போலீசாரும் 3 வழிகளில் பின்தொடர்ந்து சென்றனர். உடனடியாக மடக்கிப்பிடித்தால் மாணவியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதி, அந்த நடவடிக்கையில் போலீசார் இறங்கவில்லை.

இதற்கிடையே மதியம் 2.30 மணிக்கு அந்த மர்மப்பெண் மீண்டும் செல்போனில் பேசினார். அப்போது மாணவியின் தந்தை ரூ.10 லட்சம் என்னால் தர முடியாது என்றார். உடனே ரூ.5 லட்சமாவது தரவேண்டும். அதை ரெடி பண்ணுங்கள், என்று கடத்தல் பெண்மணி தெரிவித்தார்.

அடுத்து 3 மணிக்கு ஒரு முறையும், 4 மணிக்கு ஒருமுறையும் மீண்டும் பேசிய கடத்தல் பெண், ‘பணம் ரெடியா’ என்று கேட்டார். அதற்கு மாணவியின் தந்தை ரூ.2 லட்சம் வேண்டுமானால் தருகிறேன், என்றார். அதற்கும் கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்றார். ரூ.1 லட்சம் மட்டும் இப்போது என்னிடம் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

ஹார்டுவேர்ஸ் கடையில்...

உடனே அந்த பணத்தை, கோடம்பாக்கம் ரெயில் நிலைய சாலையில் உள்ள ‘மாடன் டூல்ஸ் ஹார்டுவேர்ஸ்’ கடையில் கொடுத்தால், அடுத்த நிமிடமே உங்கள் மகளை விடுவித்து விடுகிறேன், என்று கடத்தல் பெண் கூறினார். அதற்கு மாணவியின் தந்தை ஒப்புக்கொண்டார்.

மாலை 4.30 மணி அளவில் மாணவியின் தந்தை கடத்தல் பெண்ணுக்கு செல்போனில் பேசி, ரூ.1 லட்சத்தை நீங்கள் சொன்ன கடையில் கொடுத்துவிட்டேன், என்று கூறினார்.

உடனே கடத்தல் பெண், உங்கள் மகள் வடபழனி மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நிற்கிறாள், போய் அழைத்து போங்கள், என்று சொன்னார். 5 மணி அளவில் மாணவியை அவரது தந்தை, பத்திரமாக மீட்டு அழைத்து வந்தார். 4 மணி நேரத்தில் கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்தது.

கடத்தல் பெண் கைது

அதே நேரத்தில் ரகசியமாக கடத்தல் பெண் ஆட்டோவில் செல்வதை கண்காணித்து வந்த தனிப்படை போலீசார், கடத்தல் பெண்ணை வடபழனி 100 அடி சாலையில் வைத்து கைது செய்தனர்.

பணத்தை வாங்கிய ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் இஜாஸ்அகமதுவும் (52) கைது செய்யப்பட்டார். மாணவியை கடத்திய பெண்ணின் பெயர் மோசினா பர்வின் (32). சென்னை ஆயிரம் விளக்கு ஜான் ஜானிகான் தெருவை சேர்ந்தவர். எம்.ஏ. படித்துள்ளார். இவரது கணவர் துரித உணவகம் (பாஸ்ட் புட்) நடத்தி வருகிறார்.

இவருடன் கைது செய்யப்பட்ட, இஜாஸ்அகமதுவின் ஹார்டுவேர்ஸ் கடையில்தான், மோசினா பர்வினின் தம்பி வேலை செய்கிறார்.

அந்த வகையில் இஜாஸ்அகமது கடத்தல் பெண்ணிற்கு, நன்கு தெரிந்தவர். அதனால் கடத்தலுக்காக வாங்கிய ரூ.1 லட்சத்தை, அவரிடம் கொடுக்க சொல்லி இருக்கிறார். கைதான இருவரும் நேற்று முன்தினம் இரவோடு இரவாக நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

நகைகடனை அடைப்பதற்காக...

நகைக்காக வாங்கிய ரூ.5 லட்சம் கடனை அடைக்க கடத்தலில் ஈடுபட்டதாக, கைதான இளம்பெண் மோசினா பர்வின் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

தன்னந்தனியாக இந்த கடத்தலை அரங்கேற்றிய இவர், செல்போனில் பேசியதால், போலீசார் விரித்த வலையில் எளிதாக மாட்டிக்கொண்டார்.

மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு, குற்றவாளிகளை எளிதில் கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் வெகுவாக பாராட்டினார்.

Next Story