தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நிறுத்தம்..!!
பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைந்துள்ளதால், தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வந்தது.
இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். ஆரம்பத்தில் ஒவ்வொரு முகாமிலும், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது வரை தமிழகத்தில் 27 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. மெகா தடுப்பூசி முகாமில் மட்டும் இதுவரை 4 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தற்போது இந்த முகாமில் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்களிடையே ஆர்வம் குறைந்துள்ளது.
மெகா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைந்துள்ளதால், இன்று (9-ந்தேதி) நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் தொடர்ந்து தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story