நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி..!!


நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி..!!
x
தினத்தந்தி 10 April 2022 10:13 AM IST (Updated: 10 April 2022 10:13 AM IST)
t-max-icont-min-icon

நேற்று குளிக்க தடை விதித்த நிலையில் நீர்வரத்து குறைந்ததால் இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை, 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழைநீர் குளம் போல் தேங்கியது. இந்த நிலையில் நேற்று 2-வது நாளாகவும் மழை பெய்தது.

காலையில் இருந்தே வெயில் அடித்தாலும் மதியம் 1.30 மணி அளவில் வானில் மேக கூட்டங்கள் திரண்டு பலத்த மழை பெய்தது. பாளையங்கோட்டை, நெல்லை சந்திப்பு, மேலப்பாளையம், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த மழை பெய்தது.

நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மணிமுத்தாறு அருவி உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். தற்போது வனத்துறையினரின் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் நேற்று அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் அருவியை பார்த்து திரும்பி சென்றனர். தண்ணீர் வரத்து குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது நீர்வரத்து குறைந்ததால் இன்று முதல் அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

Next Story