மதுபானம் வாங்கி வர கூறியதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை...பார் ஊழியர் கைது


மதுபானம் வாங்கி வர கூறியதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை...பார் ஊழியர் கைது
x
தினத்தந்தி 10 April 2022 3:11 PM IST (Updated: 10 April 2022 3:11 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில், மதுபானம் வாங்கி வர கூறியதால் ஏற்பட்ட தகராறில் டாஸ்மாக் கடை அருகே வாலிபரை வெட்டிக்கொலை செய்த பார் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு வடக்குத்தெருவை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் ஜீவா(வயது 23). இவர், நேற்று  இரவு காமராஜர் பஸ் நிலையம் பின்புறம் பஜனை மடத்தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்க சென்றார். 

அப்போது அங்கு மதுபாட்டில்களை சேகரித்துக் கொண்டிருந்த பார் ஊழியரான அவையாம்பாள்புரத்தை சேர்ந்த பக்கிரிசாமி மகன் தமிழ்மணி(28) என்பவரிடம்  ஜீவா பணம் கொடுத்து மதுபாட்டில்கள் வாங்கி வருமாறு கூறியுள்ளார். அதற்கு தமிழ்மணி மறுப்பு தெரிவித்ததால் இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து ஜீவா சென்று விட்டார். 

இந்த நிலையில் இரவு 11.30 மணியளவில் ஜீவா தனது நண்பர்களான பிரேம்குமார், வினோத், அன்புமணி ஆகியோரை அழைத்துக்கொண்டு மீண்டும் அங்கு வந்து தமிழ்மணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ்மணி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜீவாவை வெட்டினார். 

இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பார் ஊழியர் தமிழ்மணியை கைது செய்தனர்.  அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்ட ஜீவாவின் உறவினர்கள், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் வேலைநேரத்திற்கு பின்னரும் சட்டவிரோதமாக இரவு முழுவதும் பாரில் மது விற்பனை நடைபெறுகிறது. அங்கு பார் நடத்தி வருபவர்கள் மற்றும் வேலை நேரத்திற்கு பிறகும் மது விற்பனையில் ஈடுபட்ட ஊழியர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story