ஆஸ்திரேலியா செல்லாமலேயே மெல்போர்ன் பல்கலைக்கழக படிப்பில் மாணவர்கள் சேர புதிய முயற்சி


ஆஸ்திரேலியா செல்லாமலேயே மெல்போர்ன் பல்கலைக்கழக படிப்பில் மாணவர்கள் சேர புதிய முயற்சி
x
தினத்தந்தி 11 April 2022 12:22 AM IST (Updated: 11 April 2022 12:22 AM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியா செல்லாமலேயே மெல்போர்ன் பல்கலைக்கழக படிப்பில் மாணவர்கள் சேர புதிய முயற்சி சென்னை பல்கலைக்கழகம் ஏற்பாடு.

சென்னை,

உலகளாவிய தரவரிசையில் 33-வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகம் இருக்கிறது. இந்த பல்கலைக்கழகத்துடன் கல்வி, ஆராய்ச்சியில் இணைந்து செயல்பட சென்னை பல்கலைக்கழகத்துக்கு, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் ஒப்புதல் அளித்து இருக்கிறது. அதன் அடிப்படையில் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் பி.எஸ்சி. (கலப்பு படிப்பு) படிப்பை வரும் கல்வியாண்டில் (2022-2023) சென்னை பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளது.

12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்விக்காக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று படிக்கும் நிலையை மாற்றவும், இந்தியாவிலேயே உலகத்தரத்திலான படிப்பை வழங்கவும் இந்த புதிய முயற்சியை, சென்னை பல்கலைக்கழகம் முன்னெடுத்திருக்கிறது.

இதன் 3 ஆண்டுகால படிப்பில் முதல் 2 ஆண்டுகள் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் மற்றும் நடைமுறை படிப்புகள் கற்றுத்தரப்படும் என்றும், இறுதியாண்டில் 3 முக்கிய துறை படிப்புகளில் ஒன்றை கலப்பு மைய படிப்புகளாக தேர்வு செய்து படிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (திங்கட்கிழமை) 2 பல்கலைக்கழகங்களுக்கு இடையே கையெழுத்தாகிறது. இதன் வாயிலாக புதிய படிப்பு அறிமுகம் செய்யப்படுவதோடு, கருத்தரங்குகள், பணியாளர்கள் பரிமாற்றம் போன்ற கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவது, கல்வி பொருட்கள் மற்றும் கல்வி வெளியீடுகள், தகவல் பரிமாற்றம் செய்துகொள்வது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Next Story