திரைப்படத்துறையில் இந்தியா உலக அளவில் வளர்ந்து வருகிறது


திரைப்படத்துறையில் இந்தியா உலக அளவில் வளர்ந்து வருகிறது
x

திரைப்படத்துறையில் உலக அளவில் இந்தியா வளர்ந்து வருவதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல பிரிவு சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தக்‌ஷின்-தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ‘ஐகான்' விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனர் தியாகராஜன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் சங்க தலைவர் நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-

திரைப்படங்கள் நாட்டின் ஆன்மாவாக திகழ்கின்றன. உலக அளவில் திரைப்படத்துறையில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியா ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அவ்வாறு தயாரிக்கப்படும் திரைப்படங்கள் உலகம் முழுவதும் சென்றடைகின்றன. நமது நாட்டு திரைப்படங்கள் மட்டுமல்லாமல், ‘ஜங்கிள் புக்' போன்ற ஹாலிவுட் திரைப்படங்களும் தயாரிப்பிற்கு பிந்தைய பணிகளுக்காக இந்தியாவிற்கு வந்துள்ளன.

15 நாடுகளுடன் ஒப்பந்தம்

நாட்டின் 75-வது சுதந்திர பெருவிழாவின் ஒரு பகுதியாக, திரைப்படத்துறையில் சிறந்து விளங்கும் 75 புதிய திறமையாளர்களுக்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. இந்திய திரைப்படத்துறையை எளிதாக்குவதற்கு மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அத்தகைய முயற்சிகளில் திரைப்பட வசதிகளுக்கான அலுவலகத்தில் ஒற்றை சாளர அனுமதி அமைப்பு முறையும் ஒன்றாகும். இந்திய தயாரிப்பாளர்களுடன் இணைந்து திரைப்படத்தை தயாரிப்பதற்காக 15 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது, “7 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா சென்றிருந்தேன். அங்கு ஒருவர் எனக்கு வடஇந்தியாவில் திரைப்படங்கள் பிடிக்கும் என்றார். எனக்கு அவர் தென்னிந்தியாவின் படங்களை பார்த்தாரா என்று தோன்றியது. நம்ம படங்களை போலதான் மலையாள படமும், மற்ற படமும். இந்தியாவில் நாம் எங்கிருந்தாலும் இந்தியாவுக்குள்தான் இருக்கிறோம். இதில் வட இந்தியா தென்னிந்தியா என்று இல்லை” என்று கூறினார்.

சினிமா தொழிலுக்கு தரவில்லை

நடிகர் நாசர் பேசும்போது, “சினிமா மொழி சார்ந்த ஒன்றாக இல்லாமல் ஒருவரை ஒருவர் அறிந்து மற்றவரை மேன்மை பெற செய்ய வேண்டும். டி.டி.எஸ். வரிச்சுமையை 1.5 சதவீதத்தில் இருந்து மீண்டும் 10 சதவீதமாக வைத்துள்ளார்கள். சிறு படங்களுக்கு வரிக்குறைப்பு உதவிகரமாக இருக்க வேண்டும். இதுகுறித்து நிதி மந்திரியுடன் எங்கள் பிரதிநிதிகள் பேசி உள்ளார்கள். நீங்களும் (எல்.முருகன்) இதை தெரிவிக்க வேண்டும்” என்றார்.

திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “1000 திரைப்படங்கள் தயாரிக்கும் இந்திய சினிமாவில் 600 திரைப்படங்களை தென்னிந்திய சினிமா தருகின்றன. தங்கத்தை வாங்கும்போது அதற்குரிய பணத்தை கொடுத்து வாங்குகிறோம். ஆனால் சினிமாவை அப்படி வாங்குவதில்லை. கொரோனாவில் மற்ற துறைக்கு நிதி உதவி கொடுத்தார்கள். ஆனால் சினிமா தொழிலுக்கு தரவில்லை. இங்கு 90 சதவீதம் பேர் தினக்கூலிகளாக உள்ளனர். எங்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பை அரசு வழங்கினால் நாங்களே எங்களை புனரமைத்துக்கொள்வோம்” என்றார்.

Next Story