திராவிட மாடல் கருத்தியலை இந்தியா முழுவதும் விதைப்போம் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேச்சு


திராவிட மாடல் கருத்தியலை இந்தியா முழுவதும் விதைப்போம் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 11 April 2022 4:36 AM IST (Updated: 11 April 2022 4:36 AM IST)
t-max-icont-min-icon

திராவிட மாடல் கருத்தியலை இந்தியா முழுவதும் விதைப்போம் என்று செங்கல்பட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், அரசின் பட்ஜெட் விளக்க மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள நகராட்சி விளையாட்டு திடலில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட அவைத்தலைவர் த.துரைசாமி, துணைச்செயலாளர்கள் வெ.விசுவநாதன், ஜி.சி.அன்புசெழியன், கலைவாணி காமராஜ், பொருளாளர்கள் எஸ்.சேகர், எம்.எஸ்.கே.இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறைமலைநகர் நகராட்சி தலைவரும், மறைமலைநகர் நகர தி.மு.க. செயலாளருமான ஜெ.சண்முகம் வரவேற்றார். தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., க.செல்வம் எம்.பி., தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் மீ.அ.வைத்தியலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், ச.அரவிந்த் ரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் பேசியதாவது:-

வாக்களித்த மக்களுக்கு நன்றி

தி.மு.க.வுக்கு வாக்களித்தால் நன்மை செய்வார்கள். பல திட்டங்களை உருவாக்கி தருவார்கள். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார்கள் என்று நம்பிக்கையுடன் வாக்களித்த மக்களுக்கு நன்றி.

இந்த கூட்டத்தின் மூலம் தி.மு.க. நிர்வாகிகளுக்கு சொல்லிக்கொள்கிறேன். உள்ளாட்சி பொறுப்பில் வந்திருக்கும் தி.மு.க.வினர் அனைவரும் தொண்டர்களோடு தொண்டர்களாக இருக்கவேண்டும். இந்த பிணைப்புதான் கட்சியை வாழவைக்கும், வளரவைக்கும். தமிழகத்தை தலைநிமிர வைக்கும்.

10 ஆண்டு காலமாக பாதாளத்தில் கிடந்த தமிழகத்தை 10 மாதத்தில் நாம் தலைநிமிர வைத்திருக்கிறோம். இதை நான் தலைநிமிர்ந்து சொல்கிறேன். இந்த 10 மாத காலத்தில் ரூ.64 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் 133 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. 2 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகம் தலைநிமிரும்

இதன் தொடர்ச்சியாகவே வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தோம்.

அந்த பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளதை மட்டும் நாம் நிறைவேற்றி காட்டினால் தமிழகம் தலைநிமிரும், இந்தியாவிலேயே முதல் மாநிலமாகவே மாறும்.

கவர்னர் மறுப்பு

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட முன்வடிவை சட்டமன்றத்தில் 2 தடவை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தோம். அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க அவர் மறுக்கிறார். இது அவர் தமிழக மக்களுக்கு இழைக்கக்கூடிய அநீதி. தமிழகத்துக்கு வர வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.

நான் டெல்லிக்கு சென்றபோது பிரதமர் மற்றும் நிதி மந்திரி ஆகியோரிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தினேன். உரிமையோடு கேட்டு விட்டு வந்திருக்கிறேன்.

கற்பனை இந்தியா

இதே கோரிக்கையை நாடாளுமன்றத்தில் நமது எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். மிகப்பெரிய நிதி நெருக்கடியில் தமிழகம் சுற்றி சுழன்று கொண்டிருக்கிறது. மாநில அரசின் நிதி தேவைகளை மத்திய அரசு நிறைவேற்றி தரவேண்டும். இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். அதைத்தான் இந்திய அரசியலமைப்பு சொல்கிறது. மாநில அரசுகளை புறக்கணிப்பதின் மூலமாக ஒரு கற்பனையான இந்தியாவை உருவாக்க நினைக்கிறார்கள்.

இந்தி மொழியை ஆதரித்தும், இந்தியர்கள் தங்களுக்குள்ளாக பேசிக்கொள்ள இந்தி மொழியைத்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உள்துறை மந்திரி அமித்ஷா சொல்லியுள்ளார். இந்தி மாநிலம் மட்டும் அவருக்கு போதுமா? இந்திய மாநிலங்கள் வேண்டாமா? இன்று என்னை போல இந்தி பேசாத மாநிலங்களில் சார்ந்த பல்வேறு கட்சி தலைவர்களும் கேள்வி எழுப்பினார்கள். எங்கள் மொழிக்கும் பண்பாட்டுக்கும் வரலாறு உள்ளது. தனித்துவம் இருக்கிறது. ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்ள இந்தி தேவை என்று சில பழைய பொய்களுக்கு புது வடிவம் கொடுக்கிறார்கள்.

அதனால்தான் நாட்டின் பன்முகத்தன்மையை காக்க இந்தி பேசாத மாநிலங்கள் மற்றும் இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள நடுநிலையாளர்கள் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பொய் மூட்டைகளை உருட்ட வேண்டாம்

ஆதிக்க வெறியில் கட்டிய பொய் மூட்டைகளை எங்களிடம் உருட்ட வேண்டாம். உங்கள் பொய்களை காலம் காலமாக பார்த்தவர்கள் நாங்கள். இந்த பொய்களை பகுத்தறிவு சிந்தனையால் உடைத்தெறிந்த இயக்கம்தான் திராவிட இயக்கம்.

இது சமத்துவமும் சமூக நீதியும் வாழும் இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாட்டு மண். திராவிட மண் இது.

பாராட்டப்படும் அரசு

துபாய் சென்றாலும் சரி டெல்லி சென்றாலும் சரி கேரளா சென்றாலும் சரி அவர்களால் பாராட்டப்படக்கூடிய அரசாக தமிழக அரசு உயர்ந்துவிட்டது. இந்த உயர்வை தொடர்ந்து பெறுவோம். இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. எனவே தமிழகத்தில் ஆட்சியில் உள்ள நமக்கு இந்தியாவின் பன்முகத்தன்மையை மதச்சார்பின்மையை சமத்துவத்தை சகோதரத்துவத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

தமிழகத்தின் சமூக நீதியை மற்ற மாநிலங்களும் பின்பற்ற தொடங்கி இருக்கின்றன. நம்முடைய மாநில சுயாட்சியை மற்ற மாநிலங்களும் பேசத் தொடங்கியிருக்கின்றன. நாம் இதுவரை பேசிய மொழி உரிமையை பிற மாநில தலைவர்களும் பேச தொடங்கியிருக்கின்றனர்.

நம்முடைய பல்வேறு திட்டங்களை பிற மாநிலங்களும் அமல்படுத்த தொடங்கி இருக்கின்றன. தமிழக மக்களுக்கு உன்னத நல்லாட்சியை கொடுத்து வரும் நாம், நம்முடைய திராவிட மாடல் கருத்தியலை இந்தியா முழுமைக்கும் விதைக்கக்கூடிய கடமையையும் செய்வோம்.

தமிழ்நாடு நம்பர்-1 மாநிலம் என்பதை நான் மட்டுமே உருவாக்கிவிடமுடியாது. நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வெள்ளி செங்கோல் பரிசு

நிறைவாக, கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவரும், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளருமான எம்.கே.டி.கார்த்தி நன்றி கூறினார்.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் கருணாநிதி உருவம் பொறித்த வெள்ளி செங்கோல் வழங்கினார்.

‘மதுராந்தகம் ஏற்படுத்திய மிகப்பெரிய மாற்றம்’
தனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

எனது வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்துக்கு வித்திட்டது மதுராந்தகம்தான். 1976-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டபோது, மதுராந்தகத்தில் ‘வெற்றி நமதே' நாடகம் நடத்துவதற்காக வந்தேன். ஆட்சி கலைக்கப்பட்டது என்று தெரிந்ததும் நாடகம் நடத்தப்படவில்லை. உடனே சென்னைக்கு திரும்பினேன். ‘மிசா' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஒரு ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டேன். சிறையில் அடைக்கப்பட்டேன் என்று சொல்வதை விட மக்களின் இதயத்தில் உள்ள சிறையில் அன்று முதல் நான் அடைக்கப்பட்டேன். இதுதான் உண்மை.

சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தான் முழுமையான அரசியலுக்கு என்னை நான் ஒப்படைத்துக்கொண்டு, தமிழ்நாடு முழுவதும் சுற்றி வரத்தொடங்கினேன். இன்றைய நாள் தமிழக மக்களால் முதல்-அமைச்சராக அமரவைக்கப்பட்டிருக்கிறேன் என்றால் அதற்கு அடித்தளம் அமைத்த ஊர் மதுராந்தகம் தான். இத்தகைய தியாக வரலாற்றுக்கு நாம் சொந்தக்காரர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.




Next Story