இரட்டை இலை சின்னம் - லஞ்ச வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் டிடிவி தினகரன்!


இரட்டை இலை சின்னம் - லஞ்ச வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் டிடிவி தினகரன்!
x
தினத்தந்தி 12 April 2022 1:01 PM IST (Updated: 12 April 2022 1:01 PM IST)
t-max-icont-min-icon

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் தர முயன்ற வழக்கு தொடர்பாக விசாரணைக்காக டிடிவி தினகரன் அமலாக்கத்துறை அலுவலகம் சென்றுள்ளார்.

புதுடெல்லி,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரியதால் சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது. இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீஸ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே இந்த வழக்கில் தினகரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. பணமோசடி தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் லஞ்ச வழக்கு தொடர்பாக சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மனில் கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் விசாரணைக்காக டிடிவி தினகரன் டெல்லியில் அமலாக்கத் துறை  அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளார்.  ஏற்கெனவே கடந்த ஆண்டு ஆஜரான நிலையில், தற்போது மீண்டும் ஆஜராகியுள்ளார்.

Next Story