அதிக வரதட்சணை கேட்டதால் திருமணத்தை நிறுத்திய பெண் என்ஜினீயர்


அதிக வரதட்சணை கேட்டதால் திருமணத்தை நிறுத்திய பெண் என்ஜினீயர்
x
தினத்தந்தி 13 April 2022 1:36 AM IST (Updated: 13 April 2022 1:36 AM IST)
t-max-icont-min-icon

மணமகன் குடும்பத்தினர் அதிக வரதட்சணை கேட்டதால் பெண் என்ஜினீயர் திருமணத்தை நிறுத்தினார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய என்ஜினீயருக்கும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சன்னாநல்லூரை சேர்ந்த 27 வயதுடைய பெண் என்ஜினீயருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்தனர். இதையடுத்து அவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.

அதன் பிறகு மணமகனுக்கு வரதட்சணையாக பெண் வீட்டார் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்துள்ளனர். மேலும் திருமணத்தின்போது பெண்ணுக்கு 30 பவுன் நகையும், மணமகனுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுப்பதாக கூறியுள்ளனர். இதற்கு மணமகன் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததையடுத்து நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி இவர்களது திருமணம் ஒரு கிராமத்தில் உள்ள கோவிலில் நடக்க இருந்தது. அதற்கான ஏற்பாட்டில் இருவீட்டாரும் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

திருமணம் நிறுத்தம்

இதற்கிடையே மணமகன் குடும்பத்தினர், அதிக வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மணமகள், தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி, நாளை மறுநாள் நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார். மேலும் நிச்சயதார்த்தத்தின் போது கொடுக்கப்பட்ட ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கும்படி நேற்று முன்தினம் ‘லேடிஸ் பர்ஸ்ட்’ காவல் உதவி எண்ணில் மணமகள் புகார் அளித்தார்.

Next Story