சித்திரை திருவிழா: தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு நாளை மாலை புறப்பாடு
அழகர்கோவிலில் சித்திரை திருவிழா நேற்று சிறப்பு பூஜையுடன் தொடங்கியதையடுத்து கள்ளழகர் தங்கப்பல்லக்கில் நாளை மாலை மதுரைக்கு புறப்படுகிறார்.
மதுரை,
கள்ளழகர் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று மாலை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் கள்ளழகர் பெருமாள் தோளுக்கினியான் பல்லக்கில் புறப்பாடாகி திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தன. பின்னர் அதே பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடாகி சென்று கோவிலுக்குள் போய் இருப்பிடம் சேர்ந்தார்.
இன்று(புதன்கிழமை) மாலையிலும் அதே விழா நடைபெறுகிறது. நாளை மாலையில் 6-15 மணிக்கு மேல் 7 மணிக்குள் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். வழி நெடுக உள்ள பொய்கைகரைபட்டி, கள்ளந்தரி, அப்பன் திருப்பதி உள்ளிட்ட பல மண்டபங்களில் சுவாமி எழுந்தருள்வார். இதற்காக 456 மண்டபங்கள் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. 15-ந் தேதி அதிகாலையில் 3 மணிக்கு மேல் 4 மணிக்குள் மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெறும்.
இதில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு 16-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 5.50 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் நடைபெற உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story