இந்தி திணிப்பை தமிழக பா.ஜ.க. ஒருபோதும் ஏற்காது - அண்ணாமலை பேட்டி


இந்தி திணிப்பை தமிழக பா.ஜ.க. ஒருபோதும் ஏற்காது - அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 13 April 2022 4:49 AM IST (Updated: 13 April 2022 4:49 AM IST)
t-max-icont-min-icon

இந்தி திணிப்பை தமிழக பா.ஜ.க. ஒருபோதும் ஏற்காது என்று அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை,

பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வை எதிர்த்து தமிழக சட்டசபையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வானது கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டது. அப்போது 45 மத்திய பல்கலைக்கழகங்களில் 14 பல்கலைக்கழகங்கள் இந்த நுழைவுத்தேர்வு மூலம் 2011-ம் ஆண்டில் மாணவர் சேர்க்கையும் நடைபெற்றுள்ளது.

குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகமும் இந்த நுழைவுத்தேர்வை நடத்தியது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத்தேர்வில் 75 பல்கலைக்கழகங்கள் பங்கெடுக்கின்றன. இதில் ஆங்கிலம், இந்தியுடன் இணைந்து தமிழ் உள்பட 13 மாநில மொழிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்தி திணிப்பை ஏற்காது

தமிழக பா.ஜ.க. இந்தி மொழி திணிப்பை ஒருபோதும் ஏற்காது. நான் உள்பட இங்கு இருப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்தி தெரியாது. ஆனால், விருப்பப்பட்டால் இந்தியை கற்றுக்கொள்ளலாம். இந்தி கற்றுக்கொண்டுதான் இந்தியர் என்று காண்பிக்க வேண்டிய நிலை யாருக்கும் இல்லை.

இதை பிரதமர் நரேந்திர மோடி கூட விரும்பவில்லை. மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள புதிய தேசிய தேசிய கல்விக்கொள்கையில் இந்தி விருப்ப மொழியாக மட்டும்தான் அறிவிக்கப்பட்டுள்ளது.

5 முறை முதல்-அமைச்சராக இருந்தபோது...

ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் இந்தி மொழியை திணித்தனர். ப.சிதம்பரம் உள்துறை மந்திரியாக இருந்தபோது, இந்தியை அலுவல் மொழியாக்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தார். அப்போது தி.மு.க. அவர்களுடன் கூட்டணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று, தற்போதைய தேசிய கல்விக் கொள்கையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசுதான் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் 5 முறை முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி தமிழை கட்டாய பாடம் ஆக்குவதற்கான நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மொழி இந்தியாவின் இணைப்பு மொழியாக வரவேண்டும் என்று கூறியுள்ளதை நாங்களும் வரவேற்கிறோம். ஆனால் அதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். அதாவது, தமிழ் மொழி மிகவும் பழமையான மொழி என்ற அடிப்படையில் இணைப்பு மொழியாவதற்கான தரத்தை பெற்றிருந்தாலும், அதற்கு தேவையான எண்ணிக்கை போதுமானதாக இல்லை.

தமிழ் இணைப்பு மொழி

எனவே, தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிற மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி அந்தந்த மாநிலங்களில் குறைந்தது 10 பள்ளிகளில் முற்றிலும் தமிழ் வழியில் முழுமையான கல்வியை வழங்க வலியுறுத்த வேண்டும். அதற்கான நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே தமிழை இணைப்பு மொழியாக்க முடியும். இத்தகைய நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தால், அதற்கு தமிழக பா.ஜ.க. நிச்சயமாக துணை நிற்கும்.

பெட்ரோல், டீசல் விலைக்கான வரியை குறைத்ததன் மூலம் மத்திய அரசுக்கு 1 லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் தமிழக அரசுக்கு பெட்ரோல், டீசல் விற்பனையில் 2 ஆயிரத்து 720 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. எனவே தமிழக அரசு தாங்கள் தேர்தல் வாக்குறுதி அளித்தபடி பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.4 விலை குறைப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story