மின்னல் தாக்கி கட்டுமான தொழிலாளர்கள் 4 பேர் பலி


மின்னல் தாக்கி கட்டுமான தொழிலாளர்கள் 4 பேர் பலி
x
தினத்தந்தி 13 April 2022 8:24 PM GMT (Updated: 2022-04-14T01:54:16+05:30)

விருதுநகரில் மின்னல் தாக்கி பெண் உள்பட 4 பேர் பலியானார்கள்.

விருதுநகர்,

விருதுநகரில் நேற்று மாலையில் பலத்த இடி-மின்னலுடன் மழை கொட்டியது. அங்கு பாண்டியன் நகர் மல்லி கிட்டங்கி தெருவில் சதீஷ்குமார் என்பவரது வீட்டின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

வீட்டின் மேல் மாடியில் புதிய குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பணியில் நேற்று கருப்பசாமி நகரை சேர்ந்த ஜெயசூர்யா (வயது 22), ரோசல்பட்டியை சேர்ந்த கார்த்திக் ராஜா (28), முருகன் (24), ஜக்கம்மாள் (55), மகேந்திரன் (38), சிவஞானபுரத்தை சேர்ந்த சங்கிலி (36) ஆகிய 6 பேர் ஈடுபட்டு இருந்தனர்.

4 பேர் பலி

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது 6 பேரும் வேலை செய்ததாக தெரிகிறது.

பின்னர் தார்ப்பாயை வைத்து, குடிநீர் தொட்டியை மூடிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென பலத்த மின்னல் வெட்டியது.

அங்கு பணியில் இருந்த ஜெயசூர்யா, கார்த்திக் ராஜா, முருகன், ஜக்கம்மாள் ஆகிய 4 பேரையும் மின்னல் தாக்கியது. சம்பவ இடத்திலேயே அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகேந்திரன், சங்கிலி ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

மேலும் 3 பேர்

கள்ளக்குறிச்சி அருகே நிறைமதி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைமுத்து. மனைவி ஜெயக்கொடி (வயது 55) என்பவர் தனக்கு சொந்தமான 12 ஆடுகளை நேற்று மேய்ச்சலுக்கு கொண்டு சென்றிருந்தபோது, நேற்று மதியம் இடி, மின்னலுடன் அங்கு மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் ஜெயக்கொடி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவருடைய 4 ஆடுகளும் செத்தன.

இதேபோல கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையை சேர்ந்த சீனிவாசன் (48) மற்றும் புதுச்சேரி மாநிலம் பாகூர் கிராமத்தை சேர்ந்த அமர்நாத் ஆகியோர் மீது மின்னல் தாக்கியது. இதில் சீனிவாசன் பலியானார். அமர்நாத் காயம் அடைந்தார். குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அருகே இனயம் பகுதியை சேர்ந்த மீனவர் ரப்சேல் (47) என்பவர் வள்ளத்தில் சென்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ரூ.2 லட்சம் நிவாரணம்

இந்த நிலையில், விருதுநகர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மின்னல் தாக்கி பலியான மேற்படி 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

Next Story