அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு


அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 April 2022 3:16 AM IST (Updated: 14 April 2022 3:16 AM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ந் தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்றும், மணிமண்டபத்தில் முழுஉருவ வெண்கலச்சிலை அமைக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள்.

110-ன் கீழ் அறிவிப்பு

இந்த நிலையில் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவை விதி எண் 110-ன் கீழ் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அம்பேத்கர் பிறந்தநாள்

அம்பேத்கர் வடக்கில் உதித்த சமத்துவ சூரியன். பலர் வாழ்வில் கிழக்காய் இருந்த பகலவன், சமூகம் ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வை, கல்வி, சட்டம், அரசியல் எழுச்சி மூலமாக சமப்படுத்திய போராளி. அறிவுச்சுடராய் விளங்கி அரசியலமைப்பு சட்டத்தை வகுத்துக்கொடுத்தவர். அவருடைய கருத்துகள் ஆழமும், விரிவும் கொண்டவை. எதிர்காலத்திற்கு ஒளிவிளக்கு அது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்ததுபோல, அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ந் தேதியை ‘சமத்துவ நாள்’ என்று கொண்டாட வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.

சமத்துவ நாளாக கொண்டாடப்படும்

இந்த கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 14-ந் தேதி (இன்று) இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்றும், சமத்துவ நாள் உறுதிமொழி தமிழ்நாடு முழுவதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் மகிழ்ச்சியோடு இந்த அவைக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

அந்த கூட்டத்தில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவருடைய முழு அளவு வெண்கலச்சிலையை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய தலைவரும், எம்.பி.யுமான தொல். திருமாவளவன் முன்வைத்தார்.

அந்த கோரிக்கையையும் ஏற்று அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச்சிலை நிறுவப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். தி.மு.க.வை சேர்ந்த எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா, பெரியாருடைய நூல்களை 21 மொழிகளில் மொழி பெயர்த்ததை பாராட்டியதோடு, அம்பேத்கருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை தமிழில் வாசிக்க வாய்ப்பாக மொழிபெயர்த்து புதுப்பிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை விடுத்திருந்தார்.

செம்பதிப்பாக வெளியிடப்படும்

அந்த கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழக அரசால் அம்பேத்கருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் செம்பதிப்பாக தமிழில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். சமூகநீதியின் நோக்கம் சமத்துவத்தை அடைவதே என்பதையும், இவ்விரண்டும் நம் இலக்கின் 2 கண்கள் என்பதையும் இந்த மாமன்றம் மட்டுமல்ல, இந்திய துணைக்கண்டமே அறியும்.

தமிழர்கள் அனைவரும் உயர்ந்த நிலையை அடைய, எத்தகைய விண்ணப்பம் வந்தாலும், அதை உடனே பரிசீலித்து ஆவன செய்கிற ஆட்சிதான் இப்போது நடக்கிறது என்பதை தெரிவித்து, இந்தளவில் இந்த அறிவிப்பை நிறைவு செய்து அமைகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

வரவேற்பு

முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.), செல்வபெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), வானதி சீனிவாசன் (பா.ஜ.க.), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்டு), சிந்தனை செல்வன் (விடுதலை சிறுத்தைகள்), சதன்திருமலை குமார் (ம.தி.மு.க.), அப்துல்சமது (மனிதநேய மக்கள் கட்சி), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), பூவை ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்) ஆகியோர் வரவேற்றனர்.

Next Story