வன்னியர் உள் ஒதுக்கீடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்
வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை,
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது சட்டம் இயற்றப்பட்டது. 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி அந்த சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு தற்போதைய தி.மு.க. ஆட்சியில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. 25-க்கும் மேற்பட்டவர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவை அனைத்தும் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டது. விசாரணைக்கு பிறகு நீதிபதிகள் தீர்ப்பு கூறுகையில், “வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர்.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த மாதம் 31-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்றும், மதுரை ஐகோர்ட்டு கிளை வழங்கிய தீர்ப்புக்கு தடை இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவித்தனர்.
இதையடுத்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி சமூக நீதி நிலைநாட்டப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில் மேல் நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story