தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 ஆயிரத்தை கடந்து விற்பனை


தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 ஆயிரத்தை கடந்து விற்பனை
x
தினத்தந்தி 15 April 2022 4:46 AM IST (Updated: 15 April 2022 4:46 AM IST)
t-max-icont-min-icon

தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 ஆயிரத்தை கடந்து விற்பனை கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.1,616 அதிகரிப்பு.

சென்னை,

தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த மாத (மார்ச்) தொடக்கத்தில் விலை அதிகரித்து, 7-ந்தேதி ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை கடந்தது. அதன் பின்னர் விலை குறைய தொடங்கியது.

இந்தநிலையில் கடந்த 5-ந்தேதியில் இருந்து தங்கம் விலை ஏறுமுகத்தில் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 996-க்கும், ஒரு பவுன் ரூ.39 ஆயிரத்து 968-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.16-ம், பவுனுக்கு ரூ.128-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 12-க்கும், ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்து 96-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அந்தவகையில் தங்கம் விலை 35 நாட்களுக்கு பிறகு, நேற்று ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை மீண்டும் கடந்து விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கடந்த 10 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.202-ம், பவுனுக்கு ரூ.1,616-ம் அதிகரித்துள்ளது. தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் நேற்று அதிகரித்திருந்தது. நேற்று கிராமுக்கு 40 காசும், கிலோவுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் 74 ரூபாய் 60 காசுக்கும், ஒரு கிலோ ரூ.74 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது.

Next Story