“ஆக்கிரமிப்புகளால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது” - ஐகோர்ட் வேதனை
ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருவதாக ஐகோர்ட் வேதனை தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் மேக்கால் புறம்போக்கு நிலத்தை கிராம நத்தம் புறம்போக்கு நிலமாக வகைமாற்றம் செய்ய மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார் எனவும் அந்த பரிந்துரையை ஏற்று தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனவும் பெத்தேல் நகர குடியிருப்பு வாசிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் அந்த நிலத்திற்கு பட்டா கோருவதற்கு உரிமை இல்லை எனவும் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை கிராம நத்தம் நிலமாக வகைமாற்றம் செய்ய அரசு தான் அனுமதி அளிக்க வேண்டுமே தவிர மாவட்ட கலெக்டருக்கு அதிகாரம் இல்லை என்றும் வாதிட்டார். அதே நேரம் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கே நிலத்திற்கான பட்டாவை வழங்கினால், அது ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போன்று ஆகிவிடும் என்று அவர் குறிப்பிட்டார்.
அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அரசின் அனுமதி இல்லாமல் மாவட்ட கலெக்டரால் நிலத்தை வகைமாற்றம் செய்ய முடியாது என்பதால் அந்த நிலத்தை வகைமாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று உத்தரவிட்டனர். மேலும் ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், அரசு நிலங்களை பாதுகாக்க வேண்டியது வருவாய்த்துறை அதிகாரிகளின் கடமை எனவும் அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்புகள் நடந்திருக்காது எனவும் தெரிவித்தனர்.
ஆக்கிரமிப்பு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு இந்த கோர்ட் ஒருபோதும் உதவாது என்று தெரிவித்த நீதிபதிகள், பட்டா வழங்கக் கோரி பெத்தேல் நகர குடியிருப்பு வாசிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story