7 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு


7 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 16 April 2022 12:30 AM IST (Updated: 16 April 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

7 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்.

சென்னை,

தமிழகத்தில் பல இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தாலும், சில இடங்களில் வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) முதல் 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். அதேபோல், நாளை மறுதினமும் (திங்கட்கிழமை), 19-ந்தேதியும் (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘ஏற்காடு 12 செ.மீ., மேல்பவானி 7 செ.மீ., திருப்பூர், ஓமலூர் தலா 6 செ.மீ., திருமூர்த்தி அணை, வறளியாறு, கெட்டி, அழகரை எஸ்டேட், பந்தலூர், குமாரபாளையம் தலா 5 செ.மீ., குன்னூர், நடுவட்டம் தலா 4 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.

Next Story