சுற்றுலா பயணிகளை துரத்திய காட்டுயானை


சுற்றுலா பயணிகளை துரத்திய காட்டுயானை
x
தினத்தந்தி 16 April 2022 1:59 AM IST (Updated: 16 April 2022 1:59 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே சுற்றுலா பயணிகளை துரத்திய காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது.

குன்னூர்,

கோடை வறட்சி காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து நீலகரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதிக்கு காட்டுயானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன.

இந்த நிலையில் குன்னூர் வனப்பகுதிக்கு 2 குட்டிகளுடன் 9 காட்டுயானைகள் இடம்பெயர்ந்து வந்துள்ளன. அவை உணவு, தண்ணீர் தேடி பர்லியார், மரப்பாலம், காட்டேரி, கிளன்டேல், பில்லிமலை, உலிக்கல் ஆகிய பகுதிகளில் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. நேற்று முன்தினம் காட்டேரி பகுதியில் உள்ள மயான பகுதியில் அந்த காட்டுயானைகள் முகாமிட்டன. அவற்றை வனத்துறையினர் விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுற்றுலா பயணிகளை துரத்தியது

ரன்னிமேடு ரெயில் நிலையம் அருகே முகாமிட்ட காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் பணி நடந்தது. அப்போது அருகில் உள்ள காட்டேரி பூங்காவை ரசித்து கொண்டு இருந்த சுற்றுலா பயணிகள் மலை ரெயில் பாதையில் காட்டுயானைகள் வருவதை கண்டு உற்சாகம் அடைந்தனர். உடனே ரெயில் நிலையத்துக்கு வந்து, காட்டுயானைகளை புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது திடீரென ஆவேசம் அடைந்த ஒரு காட்டுயானை அவர்களை துரத்தியது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் காட்டுயானைகளை நீண்ட நேரம் போராடி அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Next Story