பிள்ளையார் கோவில் தேரோட்டத்தின் போது பக்தர்களின் தாகம் தணித்த இஸ்லாமிய இளைஞர்கள்..!
நீலகண்டப் பிள்ளையார் கோவில் தேரோட்டத்தின் போது பக்தர்களின் தாகம் தணிக்க இஸ்லாமிய இளைஞர்கள் தண்ணீர் வழங்கினர்.
பேராவூரணி,
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் கோவில் திருவிழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை 9-ம் நாள் திருவிழாவாக காவடி, தேரோட்டம் நடைபெற்றது. குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொளுத்தும் வெயிலில் பால் குடம், காவடி எடுத்து வந்தனர்.
அப்போது, பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசல் முன்பு இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் பிளாஸ்டிக் கேன்களில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தனர். அதில் இருந்த தண்ணீரை, காவடி தூக்கி வந்த பக்தர்கள் வெப்பம் தணிக்க பலரும் பயன்படுத்திக் கொண்டனர். மேலும், இஸ்லாமிய இளைஞர்கள் குழாய் மூலம் தார்ச்சாலையை தண்ணீரால் நனைத்து வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்தினர்.
காவடி எடுத்து வந்த பக்தர்கள் கால்களின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளித்தனர். தாகம் தீர்க்க குடிதண்ணீர் பாட்டில்களையும் வழங்கினர்.
Related Tags :
Next Story