விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 16 April 2022 8:30 PM IST (Updated: 16 April 2022 8:30 PM IST)
t-max-icont-min-icon

விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்களுக்காக வகுக்கப்படும் திட்டங்களின் மூலம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா. ஆனால், இன்று மக்களின் வாழ்வாதாரங்களைப் பற்றி கண்டு கொள்ளாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக, கேரள மாநிலம், கொச்சி திரவ எரிவாயு முனையத்திலிருந்து பெங்களூரு வரை தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களின் ஊடே எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணியினை கெயில் நிறுவனம் மேற்கொள்ள முயற்சித்த போது, அது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் 2013-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்டது.

அந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் விவசாய நிலங்களின் ஊடே எரிவாயு குழாய்கள் அமைத்தால் விவசாயிகளின் பொருளாதார நிலைமை கடுமையாக பாதிக்கப்படும் என்றும், நிலங்களின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடையும் என்றும், எரிவாயுக் கசிவு ஏற்படும் என்றும், விவசாயப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகும் என்றும், தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய்பதிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் நிலஉரிமையாளர்கள் தெரிவித்தனர். அதேசமயத்தில், தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய்கள் அமைக்கும் பணிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொதுவாக அனுமதி வழங்காது என்றும், பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பிரச்சினைகள் ஏற்படும் என்றும் கெயில் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேற்படி கருத்துக்களின் அடிப்படையில், விவசாய நிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய்களை பதிக்கும் திட்டத்தினை கெயில் நிறுவனம் உடனடியாக கைவிட வேண்டுமென்றும், தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரமாக பதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டு அந்த முடிவு சென்னை உயர் நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்று, அங்கு கெயில் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டாலும், இந்தத் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்தச் சூழ்நிலையில், சென்ற ஆண்டு ஜூலை மாதம் ஓசூர் வழியாக உத்தனப்பள்ளி வரை விவசாயநிலங்கள் ஊடே எரிவாயு குழாய் அமைக்கும் பணியை கெயில் நிறுவனம் மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர். இதைக் கண்டித்து அப்போதே நான் அறிக்கை வெளியிட்டதோடு, வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலைகளின் ஓரமாக எரிவாயுக் குழாயைப்பதிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதல் அமைச்சரை கேட்டுக் கொண்டேன். இதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

தற்போது, தர்மபுரி மாவட்டம், பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் கெயில் நிறுவனத்தினர் மூன்று நாட்களாக எரிவாயு குழாய் அமைக்க நில அளவீடு செய்து வருவதாகவும், இதனைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கரியப்பன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி  கணேசன் தன்னுடைய நிலம் பறிபோகப் போகிறது என்ற பயத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்தச் செய்தி மன வேதனையை அளிக்கிறது.

வேளாண் துறை சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளை ஆய்ந்து உடனடி நிவாரணம் வழங்குவதற்கும், விவசாயநலத் திட்டங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துவிட்டு, இன்று வேளாண் தொழிலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எரிவாயு குழாய்களை அமைக்கும் பணியை வேடிக்கைப் பார்ப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் ஆகும்.

எனவே, முதல்-அமைச்சர் இது குறித்து உடனடியாக கெயில் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, எரிவாயு குழாய்களை நெடுஞ்சாலைகள் ஓரமாக அமைக்க வலியுறுத்தவும், உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை வழங்கவும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story