இன்னுயிர் காப்போம் திட்டத்தினால் தமிழகத்தில் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்தது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இன்னுயிர் காப்போம் திட்டத்தினால் தமிழகத்தில் 40 சதவீதம் அளவிற்கு விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்து உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
கூடுதல் கட்டிடத்துக்கு அடிக்கல்
கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஹீமோபீலியா தின விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். பின்னர் அவர் வால்பாறை அரசு ஆஸ்பத்திரி, திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆஸ்பத்திரி ஆகியவற்றில் தலா ரூ.9 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி, ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.6 கோடியே 89 லட்சம் செலவில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம் கட்டும் பணி ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் மாநிலம் முழுவதும் 32 அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.87 கோடியே 97 லட்சம் மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஹீமோபீலியா பாதிப்பு
ஹீமோபீலியா பாதிப்பு உள்ளவர்களின் சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவாகும் என்ற நிலை இருந்தது. இதனை கருத்தில் கொண்டு இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் இலவச சிகிச்சை அளிக்க 2010-ம் ஆண்டு அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி உத்தரவிட்டார்.
இதன்படி இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு அப்போது ரூ.1 லட்சம் மதிப்பிலான ஊசி இலவசமாக செலுத்தப்பட்டது. தற்போது இந்த ஊசியின் விலை ரூ.40 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனை முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஊசியை அந்தந்த மாவட்டங்களில் செலுத்தி கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை 2-வது இடம்
இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ கட்டமைப்புகளை கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதில் சென்னை முதலிடம், கோவை 2-வது இடமும் பிடித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மக்களை தேடி மருத்துவ திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது வரை 61 லட்சத்து 18 ஆயிரத்து 943 பேர் பயனடைந்து உள்ளனர்.
இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தினால் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை குறைந்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட போதிலும், முகக்கவசம் அணிவது அவசியமாகும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். கடந்த 2 ஆண்டுகளாக கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை சரிவர வழங்கப்படவில்லை. எனவே ஒரு குழு அமைத்து விடுபட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்க எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story